லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘கூலி’.
இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் , செளபின் சாஹிர், உபேந்திரா, நாகர்ஜூனா, உபேந்திரா உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். தமிழ் , மலையாளம் , தெலுங்கு என ஒவ்வொரு மொழியிலும் ஒரு நடிகரை தேர்வு செய்து இருப்பது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது.
குறிப்பாக பிரபல கன்னட நடிகர் மற்றும் இயக்குநருமாகிய உபேந்திரா பல ஆண்டுகள் கழித்து தமிழ் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூலி படத்தில் நடிப்பது குறித்துப் பேசியிருக்கிறார். இதுதொடர்பாக பேசிய அவர், ” என்னுடைய படத்தின் வேலைக்காக நான் சென்னை வந்திருந்தேன். அப்போது லோகேஷ் கனகராஜிடம் இருந்து அழைப்பு வந்தது.
அவர் ‘கூலி’ படத்தின் ஒன்லைனை மட்டும் சொன்னார். நான் அதற்கு பிறகு அவரிடம் கதை சொல்ல வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ரஜினி படத்தில் நடிக்க யாருக்குதான் ஆசை இருக்காது. எனக்கு அவர் வரும் காட்சியில் பக்கத்தில் இருக்க வேண்டும், அது போதும் என்று தெரிவித்தேன்.
அவர் மீது பெரிய மரியாதை இருக்கிறது. பணம் பெரிய விஷயம் அல்ல. நான் அவருடைய பெரிய ரசிகன்” என்று கூறியிருக்கிறார். தமிழில் உபேந்திரா கடைசியாக விஷால் உடன் இணைந்து ‘சத்யம்’ படத்தில் நடித்திருந்தார். கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் சினிமாவில் ‘கூலி’ படத்தின் மூலம் இணைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.