‘உடன்பிறப்பே’ படத்தை இயக்கிய இரா. சரவணன் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘நந்தன்’.
சமுத்திரக்கனி, ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட சிலர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் சசிகுமார், இரா.சரவணன், ஸ்ருதி பெரியசாமி, ஜிப்ரான் போன்ற படக்குழுவினரும், சீமான், ஹெச். வினோத் உள்ளிட்ட சிலரும் கலந்துகொண்டுள்ளனர்.
இதில் பேசிய இயக்குநரும், நடிகரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான், “இந்த நிகழ்ச்சியை இசை வெளியீட்டு விழாவாகப் பார்ப்பதை விடப் பல நூறு ஆண்டுகளாக இந்த மண்ணின் மக்கள் பட்ட வலியை வெளிப்படுத்தும் விழாவாகவே பார்க்கிறேன். இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் கனமாகவும் கவனமாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. எனக்கு ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது இப்படம். இந்தப் படத்தில் முதல் காட்சியிலிருந்தே என் தம்பி சசியை மறந்துவிடுவீர்கள். கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.
புதுமுக நடிகையாக அறிமுகமாயிக்குக்கும் ஸ்ருதி தன்னுடைய சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். புதுமுக நடிகை என்றே சொல்ல முடியாது அந்த அளவிற்கு நடித்திருக்கிறார். சமுத்திரக்கனியும், பாலாஜி சக்திவேலும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சமுத்திரக்கனியின் கேரக்டர் என்னைப் பொறாமைப்பட வைத்தது அந்தக் கேரக்டரரை எனக்குக் கொடுத்திருக்கக்கூடாதா என்று சரவணனை நான் திட்டினேன்.
அந்தக் கதாபாத்திரம் என்னைத்தான் காட்டுகிறது. என் கதாபாத்திரத்தில்தான் அவர் நடித்திருக்கிறார். படத்தின் கதை தற்காலத்திலும் நம்மைப் போன்ற சகமனிதர்கள் எப்படி ஒடுக்கப்படுகிறார்கள் என்பதைக் கதைக்களமாகக் கொண்டிருக்கிறது. துணிந்து இப்படத்தை என் தம்பி இரா.சரவணன் எடுத்திருக்கிறார். அனைவரும் இணைந்து ஒரு காவியத்தைப் படைத்திருக்கிறார்கள். அனைவருக்கும் பாராட்டுகளும், வாழ்த்துக்களும்.” என்று வாழ்த்திப் பேசியிருக்கிறார்.