“ஆட்சி, அதிகாரத்தில் பங்கு!” – திருமாவளவனின் நீக்கப்பட்ட வீடியோ மீண்டும் பதிவேற்றம்

சென்னை: விசிக தலைவர் திருமாவளவனின் எக்ஸ் பக்கத்தில் ‘ஆட்சி, அதிகாரத்தில் பங்கு’ குறித்து அவர் பேசும் வீடியோ இன்று (செப்.14) காலை பகிரப்பட்டு, சில நிமிடங்களில் நீக்கப்பட்டது. இது தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளான நிலையில், அந்த வீடியோ மீண்டும் பகிரப்பட்டுள்ளது.

அந்த வீடியோ இணைப்புக்கு மேல், “கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம். எளிய மக்களுக்கும் அதிகாரம். ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு! – என 1999-ல் தேர்தல் பாதையில் அடியெடுத்து வைத்த போதே உரத்து முழங்கிய இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி” என்று கடந்த செப்.12-ம் தேதி மறைமலை நகரில் நடைபெற்ற மண்டல செயற்குழுவில் ஆற்றிய உரையின் சுருக்கம்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, விசிக தலைவர் திருமாவளவனின் எக்ஸ் பக்கத்தில் இன்று காலை, “2016-ல் கூட்டணி ஆட்சி என்ற குரலை உயர்த்திய கட்சி விசிக. இடங்கள் ஒதுக்கீடு அல்ல; அமைச்சரவையில் அதிகாரப் பங்கு வேண்டும் எனக் கேட்டோம்” என அவர் பேசியிருந்த பழைய வீடியோ ஒன்று பகிரப்பட்டிருந்தது. பின்னர் சில நிமிடங்களிலேயே அந்த வீடியோ நீக்கப்பட்டது.

சில மாதங்களுக்கு முன்பு பட்டியலின சமூகத்தின் இடஒதுக்கீட்டு உரிமையை பறிக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கண்டித்தும், கிரீமிலேயர் குறித்து நீதிபதிகள் கூறிய கருத்துகளைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பேசிய திருமாவளவன், “உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி முதல்வராக வந்தது விதிவிலக்கான ஒன்று. எந்தச் சூழலிலும் எந்தக் காலத்திலும் ஒரு தலித், ஒரு மாநிலத்தின் முதல்வராக முடியாது” என்று பேசியிருந்தார். இதைத்தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது கருத்துகளை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், வரும் அக்.2-ம் தேதி உளுந்தூர்பேட்டையில், விசிக சார்பில் மது ஒழிப்பு மகளிர் மாநாடு நடத்தப்போவதாக திருமாவளவன் அறிவித்திருந்தார். மேலும், இந்த மாநாட்டில் அதிமுகவும் பங்கேற்கலாம் என அழைப்பு விடுத்திருந்தார். திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்தபடியே, அதிமுகவுக்கு அழைப்பு விடுத்ததும், தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளான நிலையில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டு பேசும் அவரது பழைய பேச்சு அடங்கிய வீடியோ எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு, பின்னர் அதனை உடனடியாக நீக்கியதும் கவனம் பெற்றது.

மதுரையில் இச்சம்பவம் குறித்த கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், “கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம் என, 1999-ல் பேசினேன். இதை நினைவுபடுத்தி செங்கல்பட்டில் நான் பேசியதை எனது, அட்மின் எடுத்து சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ஏன் அதை நீக்கினார்? எனத் தெரியவில்லை. இன்னும் எனது அட்மினை தொடர்பு கொண்டு பேசவில்லை. அதிகாரம் எளிய மக்களுக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்பதுதான் எப்போதும் எங்கள் கோரிக்கை. எனக்கு உண்மையில் அரசாங்கத்தில் பங்கு வேண்டும் என நினைத்திருந்தால் தேர்தல் நேரத்தில் கேட்டிருப்பேன். இப்போது கேட்க வேண்டிய அவசியமில்லை. தேர்தல் அரசியலோடு இதை முடிச்சு போடக் கூடாது,” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.