“சாதி, மதம், இனப் பாகுபாடு இல்லாத கட்சி தேமுதிக” – பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: “தமிழகத்தில் தேமுதிக தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டு இருப்பதற்கு முக்கியமாக சாதி, மதம், இனம் போன்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் பொதுவான கட்சியாக தொடர்ந்து பாடுபட்டு வருவதே ஆகும்,” என்று தேமுதிக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

தேமுதிக தொடங்கி 19 ஆண்டுகள் நிறைவடைந்து 20-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், தொண்டர்களுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர், “தமிழகத்தில் நிலவும் மணல் கொள்ளை, மீனவர்கள் பிரச்சினை, டாஸ்மாக் கடைகளால் ஏற்படும் அவலங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினை, பாலியல் வன்கொடுமைகள், சுங்க கட்டண உயர்வு, அண்டை மாநிலங்களுக்கு இடையே உள்ள தண்ணீர் பிரச்சினை, விவசாயம் அழிந்து பாலைவனமாக காட்சியளிக்கும் டெல்டா பகுதிகள், அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக உள்ளதால் மக்கள் பயன்படுத்த முடியாத அவலம், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு போன்ற எத்தனையோ பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இவற்றுக்கு தீர்வு காணவும், தமிழகத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் மக்களே இல்லை என்ற நிலையை உருவாக்கவும், தேமுதிக தொடர்ந்து மக்களுக்காகவும், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் பாடுபடும். எத்தனையோ வெற்றிகள், தோல்விகள், துரோகங்கள், அவதூறு வழக்குகள் வந்த போதும் பல சவால்களை சந்தித்து வீறு நடை போடுகிறது தேமுதிக.

நம் கட்சியினர் உண்மை விசுவாசத்தின் பிரதிபலிப்பாகவும், முன் எப்போதும் இருப்பதை காட்டிலும் பல மடங்கு ஒற்றுமையாகவும், உறுதியோடும் இருந்து வரப்போகும் தேர்தல்களை சந்தித்து தேமுதிக இன்று தமிழகத்தில் அசைக்க முடியாத சக்தி என்றும், தமிழகத்தில் யாரும் தவிர்க்க முடியாத மாபெரும் இயக்கம் என்றும், நம் உழைப்பால் மேலும் உணர்த்துவோம்.

தேமுதிக தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டு இருக்கிறது என்றால் அதற்கு முக்கியமாக சாதி, மதம், இனம் போன்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் பொதுவான கட்சியாக தொடர்ந்து பாடுபட்டு வருவதே ஆகும்.

பல்வேறு வெற்றிகள், தோல்விகள், சவால்கள், எதிர்நீச்சல் போட்டு, துரோகங்கள் எல்லாவற்றையும் சந்தித்து நமது பாதையில் எத்தனையோ கற்களும், முற்களும் இருந்தாலும் எல்லாவற்றையும் கடந்து 20 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இந்த நாளில் இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே, தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்ற விஜயகாந்தின் தாரக மந்திரம் படி எட்டுத்திக்கும் நமது முரசு வெற்றி முரசாக கொட்ட அனைவரும் ஒன்றாக இணைந்து உழைப்போம்.” என்று கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.