உங்கள் ஸ்மார்ட்போன் சரியாக சார்ஜ் ஆகவில்லையா? காரணம் என்னவாக இருந்தாலும், அதற்கான பல தீர்வுகள் இருக்கின்றன. சார்ஜ் ஏற்றுவதற்கு சிலபயனுள்ள முறைகளை தெரிந்துக் கொள்ளுங்கள். நம்முடைய ஸ்மார்ட்ஃபோனில் சார்ஜ் இல்லாவிட்டால், பல பிரச்சனைகள் ஏற்படும்.
முக்கியமான நேரத்தில் கழுத்தறுக்கும் மொபைல் போன் சார்ஜிங் பிரச்சனையால் சிரமப்படாதவர்களின் எண்ணிக்கை குறைவு தான். ஸ்மார்ட்போனை ஸ்மார்ட்டாக மீண்டும் சார்ஜ் செய்யத் சில முறைகளைத் தெரிந்துக் கொள்வோம்.
ஸ்மார்ட்போன் நம் வாழ்வில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்த ஒரு சாதனம். போன் என்பது பேசுவதற்காக அல்லது தகவல் தொடர்புக்காக என்ற நிலை மாறி, திரைப்படம் பார்ப்பது, கேம் விளையாடுவது மற்றும் ஆன்லைன் பேங்கிங் போன்றவற்றைச் செய்யும் காலமாக மாறிவிட்டது. இதனால் தான் போனின் பேட்டரி தீர்ந்துவிட்டால் சிரமம் ஏற்படுகிறது.
அதிலும், சார்ஜர் நம்மிடமே இருந்தும் ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யப்பட முடியாதபோது பிரச்சனை பெரிதாகிறது. இதனால், பெரும்பாலான பணிகள் பாதிக்கப்படுகின்றன.
செயலிகள்
மொபைல் ஃபோனின் பின்னணியில் செயலில் உள்ள செயலிகளால், பேட்டரி சட்டென்று தீர்ந்துவிடுகிறது. சார்ஜ் போட்டிருந்தாலும், போனில் உள்ள செயலிகள் இயங்கிக் கொண்டே இருப்பதால், சார்ஜர் இணைக்கப்பட்டிருந்தாலும் போன் சார்ஜ் ஆகாது. எனவே, தொலைபேசியின் பின்னணியில் இயங்கும் செயலிகளை மூடிவிட்டு சார்ஜ் செய்யவும்.
ரீ-ஸ்டார்ட்
உங்கள் ஸ்மார்ட்போன் சார்ஜ் ஆகவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்கள் போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிடவும். சில நிமிடங்கள் காத்திருக்கவும். இப்போது ஸ்மார்ட்போனை மீண்டும் இயக்கவும். ஏதேனும் பிரச்சனை இருந்தாலும், அது சரியாகி, போன் சார்ஜ் ஆகத் தொடங்கும்.
சார்ஜிங் கேபிள்
சில நேரங்களில் சார்ஜிங் கேபிள் பழுதடைவதால் ஸ்மார்ட்போன் சார்ஜ் ஆகாது. எனவே, சார்ஜிங் கேபிளை மற்றொரு தொலைபேசியுடன் இணைத்து, அது சரியாக செயல்படுகிறதா என்பதை சரிபார்க்கவும். அது வேலை செய்யவில்லை என்றால், ஸ்மார்ட்போன் பிராண்டின் கடைக்குச் சென்று அதன் அசல் கேபிளை வாங்கவும். இதற்குப் பிறகு, தொலைபேசி சார்ஜ் செய்யத் தொடங்கும்.
சார்ஜிங் போர்ட்
சார்ஜிங் போர்ட்டில் தூசி மற்றும் அழுக்கு குவிவதால் ஸ்மார்ட்போனின் பேட்டரி சார்ஜ் ஆகாது. சார்ஜிங் போர்ட்டை சுத்தம் செய்து பயன்படுத்தவும். அப்போது, முன்பு போலவே ஸ்மார்ட்போன் சார்ஜ் ஆகத் தொடங்கும். செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகளைப் பின்பற்றிய பிறகும் தொலைபேசி சார்ஜ் ஆகவில்லை என்றால், அதை வாடிக்கையாளர் சேவைக்கு எடுத்துச் சென்று பழுதுபார்க்கவும்.
இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் வாங்கும்போது அதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அதன் சார்ஜருக்கும் கொடுக்க வேண்டியிருக்கிறது. முன்பெல்லாம், சார்ஜரை பிறரும் பகிர்ந்துக் கொள்வதிலோ, சிறிது நேரம் பயன்படுத்த கடன் கொடுப்பதிலோ யாருக்கும் தயக்கம் இருக்காது. ஆனால், இன்று அந்த நிலை மாறிவிட்டது. ஸ்மார்ட்போன் சார்ஜர், தரமானதாகவும், ஒரிஜினலாகவும் இருக்க வேண்டும். இல்லை என்றால் விலை மதிப்பு மிக்க ஸ்மார்ட்போன் சேதமடையும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
ஒரிஜினலாக தயாரிப்பு நிறுவனம், ஸ்மார்ட்போனுடன் கொடுக்கும் சார்ஜரைத் தவிர, வேறு எங்கும் ஸ்மார்ட்போனுக்கான சார்ஜரை வாங்கினால் கவனமாக இருப்பது நல்லது. ஏனென்றால், பல பொருட்கள் டூப்ளிகேட் ஆக உள்ளது என்பதால், எச்சரிக்கை அவசியமாகிறது.
ஒரிஜினல் ஆப்பிள் சார்ஜிங் அடாப்டரின் விலை ரூ.1600 என்றால், இதே சார்ஜரின் டூப்ளிகேட் இணையதளங்களில் ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கிறது. பிரபலமான இணையதளம் ஏமாற்றாது என நினைத்து வாங்கினால் முதலுக்கே மோசம் வந்துவிடும்.
டூப்ளிகேட் பொருட்கள் பெரும்பாலும் ஒரிஜினலைப் போலவே இருப்பதால் ஏமாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பேக்கேஜிங், வடிவமைப்பு மற்றும் பெயரில் வருவதால், தயாரிப்புகளை வேறுபடுத்தி அறிவது மிக கடினம். இருப்பினும், பேக்கேஜிங், பெயர் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றில் உள்ள சிறிய அளவிலான முரண்பாடுகளைப் கூர்ந்து கவனிப்பதன் மூலம் இவற்றை வேறுபடுத்தி அறியலாம். ஆனால் பார்த்த உடனேயே கண்டுபிடிக்கும் வகையில் எளிதானது அல்ல.