சென்னை: சென்னை பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு, திருவொற்றியூர் கடலில் விநாயகர் சிலைகள் கரைக்கும் பணி தொடங்கியது.
விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 7-ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி, தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். சென்னையில் மட்டும் 5 ஆயிரம் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்தவகையில், தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் இடங்களில் பெரிய அளவிலான (10 அடிக்குட்பட்டது) சிலைகள் வைக்கப்பட்டது. சென்னையில் மட்டும் 1,519 சிலைகள் பெரிய அளவிலான சிலைகள் அடங்கும்.
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி முடிந்து சென்னையில் செப்.15-ம் தேதி வரை சிலைகளை கடலில் கரைப்பதற்காக போலீஸார் அனுமதி வழங்கியிருந்தனர். குறிப்பாக, செப்.11, 14, 15-ம் தேதிகளில் பெரிய அளவிலான சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று, பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலைநகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை ஆகிய கடற்கரை பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்தவகையில், கடந்த 11-ம் தேதி பொதுமக்கள் தங்களது வீடுகளில் வைத்து வழிபட்ட சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை நீர்நிலைகள் மற்றும் கடலில் கரைத்தனர். இந்நிலையில், சனிக்கிழமையான இன்று பல பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் சென்னை கடற்கரைகளுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கரைப்பட்டது. குறிப்பாக, பட்டினப்பாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக காவல்துறையும், சென்னை மாநகராட்சியும் பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு ராட்சத கிரேன் கொண்டு வரப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தது. மேலும், 2 சிறிய அளவிலான கிரேன் வாகனங்களும் கூடுதலாக நிறுத்தப்பட்டிருந்தது. அதுமட்டுமில்லாமல், தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் வாகனங்கள், தன்னார்வலர்கள், தூய்மை பணியாளர்கள் என சிலைகளை கரைப்பதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மேலும், சிலைகளை சாலையில் இருந்து கடற்பரப்பு வழியாக கிரேன் இருக்கும் பகுதிக்கு கொண்டு செல்ல, சுமார் 50 அடி நீளமுள்ள டிராலி அமைக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு கோபுரங்கள், காவல் கட்டுப்பாட்டு அறை, கண்காணிப்பு கேமராக்கள், சிலைகள் கடலில் கரைப்பதை பார்க்க வரும் பொதுமக்களை ஒழுங்குப்படுத்த தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சனிக்கிழமையான இன்று மாலை பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு 4-க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான சிலைகள் கொண்டு வரப்பட்டு விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கும் பணி தொடங்கியது.
சிலைகளை கிரேன் மூலமாக கடலுக்கு எடுத்து சென்று, கடலுக்குள் தன்னார்வலர்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு சிலைகள் கரைக்கப்பட்டது. சிலைகளை கடலுக்கு கொண்டு வருவதற்கு முன்பு, சிலையின் இருக்கும் மாலை, துணி உள்ளிட்ட பொருட்களை எடுத்துவிட்டு பின்னர் சிலைகளை கடலில் கரைக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக மாநகராட்சி ஊழியர்களால் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டது. இதேபோல், மீதமுள்ள 3 கடற்கரை பகுதிகளில் சிலைகளை கரைக்க காவல்துறை, மாநகராட்சி சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு சிலைகள் கரைக்கப்பட்டன.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நாளை காலை 7 மணி முதல் சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து, ஒவ்வொரு கடற்கரை பகுதிகளுக்கும் 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கரைக்கப்பட இருக்கின்றன. இதனால், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட 4 கடற்கரை பகுதிகளிலும் போலீஸார் சில போக்குவரத்து மாற்றங்களை செய்துள்ளனர். இந்த பணிகளை காவல்துறை உயர் அதிகாரிகள் தொடர்ச்சியாக ஆய்வு செய்தனர்.