புதுடெல்லி: அனைத்து இந்திய மொழிகளையும் ஒன்றாகக் கொண்டு செல்வதன் மூலம், வளர்ச்சியடைந்த இந்தியாவின் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கு அலுவல் மொழியான இந்தி தொடர்ந்து பங்களிக்கும் என்று நம்புவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இந்தி அலுவல் மொழி தினம் இன்று (செப்.14) கொண்டாடப்படுவதை முன்னிட்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்தி தின நல்வாழ்த்துக்கள். அனைத்து இந்திய மொழிகளும் நமது பெருமை மற்றும் நமது பாரம்பரியம். அவற்றை வளப்படுத்தாமல் நாம் முன்னேற முடியாது. அலுவல் மொழி இந்தி ஒவ்வொரு இந்திய மொழியுடனும் பிரிக்க முடியாத உறவைக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு, இந்தி மொழி நாட்டின் அதிகாரபூர்வ மொழியாக பொதுத் தொடர்பு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டின் 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அனைத்து இந்திய மொழிகளையும் ஒன்றாகக் கொண்டு செல்வதன் மூலம், வளர்ச்சியடைந்த இந்தியாவின் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கு அலுவல் மொழியான இந்தி தொடர்ந்து பங்களிக்கும் என்று நான் நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
அலுவல் மொழி வைரவிழா கொண்டாட்டங்கள் புதுடெல்லியில் இன்று நடைபெற உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று (2024 செப்டம்பர் 14) புதுடெல்லியில் நடைபெற உள்ள அலுவல் மொழி வைரவிழா கொண்டாட்ட நிகழ்ச்சியிலும், 4-வது அகில இந்திய அலுவல் மொழி சம்மேளனத்தின் தொடக்க அமர்விலும் உரையாற்ற உள்ளார்.
இந்தி அலுவல் மொழியாகி 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில் இன்றும், நாளையும் (செப்டம்பர் 14, 15) டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 4வது அகில இந்திய அலுவல் மொழி மாநாடு நடைபெற உள்ளது. உள்துறை அமைச்சகத்தின் அதிகாரபூர்வ மொழித் துறை இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.
இந்த விழாவின்போது, ‘ராஜ்பாஷா பாரதி’ இதழின் வைரவிழா சிறப்பு வெளியீட்டை மத்திய உள்துறை அமைச்சர் வெளியிட உள்ளார். வைர விழாவை முன்னிட்டு, அஞ்சல் தலையையும், நாணயத்தையும் அமித் ஷா வெளியிட உள்ளார். ராஜ்பாஷா கவுரவ், ராஜ்பாஷா கீர்த்தி விருதுகளையும் அமித் ஷா வழங்கவுள்ளார்.
மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ், மத்திய உள்துறை இணை அமைச்சர்கள் நித்யானந்த் ராய், பண்டி சஞ்சய் குமார், நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் துணைத் தலைவர் பர்த்ருஹரி மஹ்தாப், குழுவின் இதர உறுப்பினர்கள், மத்திய அரசின் செயலாளர்கள், பல்வேறு வங்கிகள் பொதுத்துறை நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், தென்னிந்தியாவைச் சேர்ந்த இரண்டு இந்தி அறிஞர்கள், ஆகியோர் தொடக்க அமர்வில் கலந்து கொள்வார்கள். இரண்டு நாள் மாநாட்டில் 10,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.