109 ஆண்டுகளுக்குப் பிறகு, நியாயமற்ற விசாரணையில் ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்ட ஹென்றி பெட்ரிஸுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு

109 வருடங்களுக்கு முன்னர் பிரித்தானிய ஆட்சியாளர்களால் நியாயமற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸுக்கு மரணத்திற்குப் பின் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.  

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அரசியலமைப்பின் 33(h) உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டதுடன் விசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த 12ஆம் திகதி வெளியிடப்பட்டது. 

1915 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் திகதி, அப்போதைய இலங்கை ஆளுநரான ரொபர்ட் சாமஸ் வெளியிட்ட பிரகடனத்தின் மூலம் நியமிக்கப்பட்ட இராணுவ நீதிமன்றத்தின் நியாயமற்ற விசாரணைக்குப் பிறகு, 1915 ஆம் ஆண்டு ஜூலை 07 ஆம் திகதி அன்று கேப்டன் எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸ் சட்டவிரோதமா மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்த வர்த்தமானி அறிவிப்பில், கப்டன் எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸுக்கு மரணத்திற்குப் பின் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

1888 ஆகஸ்ட் 16 காலியில் பிறந்த ஹென்றி பெட்ரிஸ், ஆங்கிலேயர் ஆட்சியின் போது இலங்கையில் வாழ்ந்த ஒரு முக்கிய சமூக ஆர்வலராகவும், அதே போல் இலங்கை பாதுகாப்புப் படை மற்றும் கொழும்பு நகர காவல்படையில் பணியாற்றிய கேப்டன் பதவியில் இருந்த இராணுவ அதிகாரியாகவும் இருந்தார். . 

 

1915 இனவெறிக் கலவரத்தைத் தூண்டிய குற்றச்சாட்டின் பேரில் பிரிட்டிஷ் அதிகாரிகளால் அவர் தூக்கிலிடப்பட்டார். 

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.