புதுடெல்லி: 1984-ல் நடந்த ஏர் இந்தியா விமானக் கடத்தலின்போது எனதுதந்தையும் விமானத்தில் சிக்கியிருந்தார் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
கடந்த 1999-ம் ஆண்டு டிசம்பர்24-ம் தேதி ‘ஐசி 814′ என்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம்154 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் நேபாள தலைநகர் காத்மாண்டுவிலிருந்து புறப்பட்ட 40 நிமிடங்களில் 5 தீவிரவாதிகளால் ஆப்கானிஸ்தானுக்கு கடத்தப்பட்டது. பின்னர். மசூத் அசார், உமர்ஷேக் மற்றும் முஷ்டாக்அகமது சர்கார் ஆகிய மூன்று தீவிரவாதிகள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து விமானம் விடுவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை மையமாக வைத்து ‘கந்தஹார் விமானக் கடத்தல் ஐசி-814′ என்ற புதிய வெப்தொடர் ஆகஸ்ட் 29-ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்த வெப் தொடரில் இந்துக்களின் பெயர்கள் தவறாக சித்தரித்திருப்பதாக சர்ச்சை எழுந்தது. இதைத் தொடர்ந்து நெட்பிளிக்ஸ் சார்பில் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம். இனிமேல், இதுபோன்ற சர்ச்சை எழாத வண்ணம்கதையின் கரு மற்றும் சர்ச்சைக்குரிய விஷயங்களை முன்பே ஆராய்ந்து களைவதற்கான திட்டங்களை மேற்கொள்வோம்” என்று தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நேற்று புலம்பெயர்ந்த இந்திய மக்களுடன் நடைபெற்ற சந்திப்பில் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நெட்பிளிக்ஸில் வெளியான ‘ஐசி 814 தி கந்தஹார் ஹைஜாக்’ தொடரை இதுவரை நான் பார்க்கவில்லை. அதேபோல் 1984-ல் ஏர்இந்தியா விமானம் கடத்தப்பட்டபோது நான் இளம் அதிகாரியாக இருந்தேன். அந்த விவகாரத்தை கையாளும் பொறுப்பிலிருந்த குழுவில் நானும் இருந்தேன். அப்போது எனது மகன் பிறந்து சில மாதங்களே ஆகியிருந்தது. எனது மனைவியும் அப்போது பணியில் இருந்தார். நான் வீட்டுக்குச் சென்று மகனைப் பார்த்துக் கொள்வேன்.
விமானம் கடத்தப்பட்டபோது நான் எனது தாய்க்கு போன் செய்து என்னால் வீட்டுக்கு வரமுடியாது. ஒரு விமானம் கடத்தப்பட்டுள்ளது. மகனை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தேன். அப்போதுதான் என் தந்தையும் அந்த விமானத்தில் சிக்கியுள்ளார் என்பது தெரியவந்தது. இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஒருபக்கம் விமான கடத்தல் விவகாரத்தைக் கையாளும் மத்திய அரசு குழுவில் நான் இருந்தேன். மறுபக்கம் விமானக் கடத்தலில் சிக்கியுள்ளவர்களை மீட்குமாறு மத்திய அரசை வலியுறுத்தும் குடும்ப உறுப்பினர்களில் ஒரு பகுதியாகவும் நான் இருந்தேன். எனவே, இது தனித்துவமான பிரச்சினையாக அப்போது அமைந்தது. இவ்வாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.