Doctor Vikatan: நம் எல்லோருக்கும் வாழ்க்கையில் அடிக்கடி சுளுக்கு ஏற்பட்ட அனுபவம் இருக்கும். சில நேரங்களில் அது உடனே சரியாகிவிடுகிறது. சில சமயம், நாள்கணக்கில் தொடர்கிறது. சுளுக்கு ஏற்பட்டால் வீட்டிலிருக்கும் சாதாரண தைலம் தடவி நீவி விட்டால் போதுமானதா…. வேறு மருந்துகள் அவசியமா?
பதில் சொல்கிறார் சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்.
கை, கால்களிலோ, உடலின் வேறு பகுதிகளிலோ சுளுக்கு பிடித்துக்கொள்வது இயல்பாக நடப்பதுதான். சுளுக்கு ஏன் ஏற்படுகிறது என்பதைப் புரிந்துகொண்டால், அதை அணுகுவதும் எளிதாகும்.
நம் தசைகள் எல்லாம் ஒரு ரப்பர் பேண்டு போல சுருங்கியும் விரிந்தும் நம் அசைவுகளுக்கு ஈடு கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்த ரப்பர் பேண்டு அசைவுகள் சரியாக நடக்காமல் கோணல், மாணலாக நடந்தாலோ அல்லது விரிந்த நிலையில் அதன் மேல் அதிக அழுத்தம் விழுந்தாலோ அசாதாரண சுருக்கம் (abnormal contraction ) ஏற்படும். அதைத்தான் நாம் சுளுக்கு என்று சொல்கிறோம்.
தசைநார்கள் சில இடங்களில் மட்டும் சுருங்கி விரியும் தன்மையை இழந்துவிடுகின்றன. அதாவது சில இடங்களில் அவை சிக்கிக்கொண்டதுபோல மாறுவதையே சுளுக்கு என்கிறோம். மிகவும் மிதமான சுளுக்கு என்றால் தைலம் தடவி நீவி விடுவது, ஓய்வெடுப்பது போன்றவற்றின் மூலமே சரிசெய்துகொள்ள முடியும். அதைத் தாண்டி, சிலருக்கு சுளுக்கு நீண்ட நாள்கள் தொடரக்கூடும்.
அந்த நிலையில் ‘மஸுல் ரிலாக்ஸன்ட்ஸ்’ (Muscle relaxants) என்ற மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். இந்த வகை மருந்துகள், சுருங்கிப் போன தசைகளை முழுமையாக விரிவடையச் செய்வதால் சுளுக்கு சரியாகும். அப்படிச் சரியான பிறகு உடலை சரியான பொசிஷனில் வைத்திருப்பது, மீண்டும் சுளுக்கு ஏற்படாமல் பார்த்துக்கொள்வது போன்றவற்றை சிலவகை பயிற்சிகளின் மூலம் சாத்தியப்படுத்தலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.