மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் கடந்த மாதம் 9-ம் தேதி 31 வயது பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலைக்கு நீதிகேட்டு கொல்கத்தா டாக்டர்கள் அங்குள்ள சுகாதாரத்துறை தலைமை அலுவலகம் முன்பு காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு பணியில் சேரும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. ஆனால் அதனை டாக்டர்கள் கேட்கவில்லை. திடீர் திருப்பமாக முதல்வர் மம்தா பானர்ஜி இன்று காலை டாக்டர்கள் போராட்டம் நடத்தும் இடத்திற்கு வந்தார். டாக்டர்கள் கோஷமிட்ட படி இருந்தனர். உடனே அவர்களிடம் “கோஷமிடுவதை நிறுத்திவிட்டு நான் சொல்வதை ஐந்து நிமிடங்கள் கேளுங்கள்” என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில், ”பாதுகாப்பு எச்சரிக்கையையும் மீறி நான் இங்கு வந்திருக்கிறேன். நானும் மாணவர்கள் போராட்டத்தில் பங்கெடுத்து இருக்கிறேன்.
போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு பணிக்கு திரும்புங்கள். உங்களது கோரிக்கையை நாங்கள் பரிசீலிக்கிறோம். நான் தனிப்பட்ட முறையில் ஆட்சியை நடத்தவில்லை. தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி-யிடம் பேசுகிறேன். தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். படுகொலை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என்று உங்கள் சார்பாக சி.பி.ஐ-யை கேட்டுக்கொள்கிறேன். நேற்று இரவு முழுவதும் மழை பெய்தது. அதனால் நீங்கள் மிகுந்த கஷ்டத்திற்கு ஆளானீர்கள். எனவே நானும் இரவு முழுக்க தூங்கவில்லை. உங்களது கோரிக்கையை நிறைவேற்ற எனக்கு சிறிது அவகாசம் தேவை. என்மீது நம்பிக்கை இருந்தால் பேச்சுவார்த்தை நடத்த என்னிடம் வாருங்கள்.
சரியான சிகிச்சை கிடைக்காமல் பல நோயாளிகள் இறந்து கொண்டிருக்கின்றனர். எனவே பணிக்கு திரும்புங்கள். அநீதி நடக்காது. யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாது. நீங்கள் எவ்வளவு முக்கியம் என்று எனக்கு தெரியும். என் மீது நம்பிக்கை வைத்தால் உங்களது புகாரை கவனிக்கிறேன். உங்களது சகோதரியாக நான் இங்கு வந்திருக்கிறேன். முதல்வராக வரவில்லை. உங்களது போராட்டத்திற்கு நான் ஆதரவு கொடுக்கிறேன். நானும் 26 நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். யாரும் என்னிடம் வந்து பேசவில்லை” என்றார். மம்தா பானர்ஜி பேசி முடித்தவுடன் மாணவர்கள் எங்களுக்கு நீதிவேண்டும் என்று உரக்க கத்தினர்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த டாக்டர்கள், “மம்தா பானர்ஜியுடனான பேச்சுவார்த்தை வெளிப்படையானதாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறோம். அதுவும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவேண்டும் என்று விரும்புகிறோம்” என்று தெரிவித்தனர். முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்களை மாநில அரசு கடந்த செவ்வாய்கிழமை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. ஆனால் அதனை டாக்டர்கள் நிராகரித்தனர். அதன் பிறகு புதன்கிழமை பேச்சுவார்த்தைக்கு 4 முக்கிய நிபந்தனைகளை முன்வைத்தனர்.
அதில் மம்தா பானர்ஜி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெறவேண்டும் என்றும், தங்களது தரப்பில் 30 பேர் கொண்ட குழு பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். டாக்டர்களின் கோரிக்கையில் 3 கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து வியாழக்கிழமை டாக்டர்கள் பேச்சுவார்த்தை நடத்த தலைமை செயலகத்திற்கு வந்தனர். பேச்சுவார்த்தையை நேரடி ஒளிபரப்பு செய்யவேண்டும் என்ற கோரிக்கையை மாநில அரசு நிராகரித்தது. இதையடுத்து திட்டமிட்டபடி பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. அப்போது நிருபர்களுக்கு பேட்டியளித்த மம்தா பானர்ஜி, இரண்டு மணி நேரமாக டாக்டர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த காத்திருந்ததாகவும், பிரச்னை கோர்ட்டில் இருப்பதால் அதனை நேரடி ஒளிபரப்பு செய்வது சரியாக இருக்காது என்றும் தெரிவித்தார்.