அணு ஆயுதம் குறித்து ஐன்ஸ்டீன் எழுதிய எச்சரிக்கை கடிதத்தின் நகல் ரூ.32.7 கோடிக்கு ஏலம்

வாஷிங்டன்,

20-ம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளர்களில் ஒருவரும், தலைசிறந்த இயற்பியலாளரும், விஞ்ஞானியுமான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், 1939-ம் ஆண்டு அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ரூஸ்வெல்ட்டுக்கு எழுதிய கடிதத்தின் நகல் ஒன்று தற்போது கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் பிறந்தவரான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், 1933-ம் ஆண்டு அமெரிக்காவிற்கு பயணம் செய்தார். அதே சமயம், ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்தார். தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் ஹிட்லரின் நாஜி படைகள் மேற்கொண்ட யூத அழிப்பு நடவடிக்கைகளால், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அமெரிக்காவிலேயே குடியேற முடிவு செய்தார்.

இதற்கிடையில், ஜெர்மனியின் அணு விஞ்ஞானிகள் அணு ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருந்தனர். அணுவைப் பிளந்து அதன் ஆற்றலைக் கொண்டு அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஜெர்மானியர்கள் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. இது அப்போதைய அறிவியலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளை பெரிதும் கலக்கமடையச் செய்தது.

அந்த சமயத்தில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், நிலைமையின் தீவிரத்தை உணர்த்தும் வகையில் அப்போதைய அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட்டுக்கு எச்சரிக்கை கடிதம் ஒன்றை எழுதினார். அதில், ஜெர்மானியர்கள் அணு ஆயுதத்தை தயாரிப்பதற்கு முன்பாக அமெரிக்க அரசாங்கம் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார்.

ஐன்ஸ்டீன் எழுதிய இந்த கடிதம்தான் அமெரிக்க அரசாங்கத்தின் ‘மேன்ஹாட்டன் திட்டம்’ வேகமாக உருவெடுக்க தூண்டுகோலாக அமைந்தது. உலக நாடுகளின் கண்ணில் மண்ணைத் தூவி, மிகவும் ரகசியமான முறையில் மேன்ஹாட்டன் திட்டத்தை செயல்படுத்திய அமெரிக்கா, அணு ஆயுதத்தை வெற்றிகரமாக தயாரித்தது. இந்த அணு ஆயுதமே 2-ம் உலகப் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு முக்கிய காரணமாகவும் அமைந்தது.

அந்த வகையில் ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணமாக கருதப்படுகிறது. அவர் எழுதிய அசல் கடிதம், நியூயார்க்கில் உள்ள பிராங்கிளின் டி.ரூஸ்வெல்ட் நூலக தொகுப்பில் உள்ளது. இந்நிலையில், ஐன்ஸ்டீன் கையெழுத்திட்ட இந்த கடிதத்தின் நகல் ‘கிறிஸ்டி’நிறுவனம் நடத்திய ஏலத்தில் 3.9 மில்லியன் டாலருக்கு(சுமார் 32.7 கோடி ரூபாய்) விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம் அமெரிக்காவின் அணு ஆராய்ச்சித்துறையின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி இருந்தாலும், பின்னாட்களில் ஐன்ஸ்டீன் இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஹிரோஷிமா மற்றும் நாகாசாகியில் அணு ஆயுதங்கள் ஏற்படுத்திய பேரழிவைக் கண்டு ஐன்ஸ்டீன் மிகவும் மனம் வருந்தியதாக கூறப்படுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.