ஆக்ரா: உத்தர பிரதேசம் ஆக்ராவில் 48மணிநேரம் பெய்த தொடர் கனமழையால் 151 மிமீ மழை கடந்த வியாழன் அன்று பதிவானது.
இதனால் நகரில் உள்ள பாரம்பரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்கள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக இந்தியதொல்லியல் துறை உணர்ந்தது. இதனையடுத்து, பாரம்பரிய சின்னங்களின் நிலையை கண்காணித்து ஆய்வு மேற்கொள்ளும் பணியை ஊழியர்களிடம் ஒப்படைத்தது.
ஆய்வில், ஆக்ரா கோட்டை, ஃபதேபூர் சிக்ரி, ராம்பாக் அரண்மனை, மேதாப் பாக் அரண்மனை, அக்பர் கல்லறை, ரோமன்கத்தோலிக்க கல்லறை உள்ளிட்டவற்றில் ஆங்காங்கே சிறிதளவு சேதாரம் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது. குறிப்பாக தாஜ்மஹால் மேற்கூரையில் நீர் கசிவு ஏற்பட்டதால் தண்ணீர் உள்ளேபுகுந்து ஷாஜகான் சமாதிவரை சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் ராஜ்குமார் படேல் கூறியதாவது: தாஜ்மஹால் மேற்கூரையின் எந்த பகுதியில் துவாரம் ஏற்பட்டதால் உள்ளே நீர் புகுந்துள்ளது என்பதை கண்டறியும் பணி மேற்கொள்ளப்பட்டது. சோதனையின்போது கல்லறை மாடம் ஈரமாக இருப்பதை கண்டோம். மேற்கூரையில் பதிக்கப்பட்ட கற்களில் ஏற்பட்ட மயிரிழை விரிசல் வழியாகத்தான் நீர் கசிந்து உட்புகுந்திருக்கும் என்று சந்தேகப்படுகிறோம்.
மண்டபத்துக்குள் எங்கெல்லாம் தண்ணீர் சொட்டுகிறது என்பதையும், தொடர்ச்சியாக ஒரே இடத்தில் சொட்டுகிறதா இல்லை ஆங்காங்கே சொட்டுகிறதா என்பதையும் கண்காணித்து வருகிறோம். எதுவாயினும் மழை நின்றவுடன் உரிய சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு தொல்லியல் ஆய் வாளர் கூறினார்.