மும்பை: “1975 ஜூன் 25-ம் தேதி ஒரு கருப்பு நாள்.எமர்ஜென்சி நாட்கள் இந்திய வரலாற்றின் இருண்ட காலம். அது தொடர்பான அறிவு அரசியலமைப்பைப் பாதுகாக்கும் வலிமையை வழங்கும்.” என்று குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள எல்பின்ஸ்டன் தொழில்நுட்ப உயர்நிலைப்பள்ளி, ஜூனியர் கல்லூரியில்இன்று (ஞாயிற்றுக்கிழமை) ‘சம்விதான் மந்திர்’ எனப்படும் ‘அரசியல் சாசன கோயில்’ திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கலந்து கொண்டார்.
அவரது உரையில் தெரிவித்ததாவது: அரசியலமைப்பு சட்டத்தை ஒரு புத்தகமாகப் பார்க்கக் கூடாது. அதற்கு மதிப்பளிக்க வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும். அரசியலமைப்பின் கீழ் நம் அடிப்படை உரிமைகளை அனுபவிக்கும் அதே வேளையில், நமது அரசியலமைப்பு அடிப்படை கடமைகளையும் உள்ளடக்கியது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்பின் மனசாட்சி. அது சமத்துவத்தை கொண்டு வருவதற்கான உறுதியான நடவடிக்கை. அம்பேத்கருக்கு 1990 மார்ச் 31-ம் தேதி ‘பாரத ரத்னா’ வழங்கப்பட்டது. இருந்தாலும் இந்த கவுரவம் ஏன் முன்னரே வழங்கப்படவில்லை?
சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவின் வரலாற்றில் இருண்ட காலமான 21 மாத அவசரநிலை குறித்து இளைய தலைமுறையினர் விழிப்புடன் தகவல்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட நாளை ஒருபோதும் மறக்காமல் அதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். 1975 ஜூன் 25-ம் தேதி ஒரு கருப்பு நாள். சுதந்திரத்துக்குப் பிந்தைய நமது பயணத்தின் இருண்ட அத்தியாயம். அது தொடர்பான அறிவு அரசியலமைப்பைப் பாதுகாக்கும் வலிமையை வழங்கும். இதைக் கருத்தில் கொண்டுதான் 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 அன்று அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது.
ஜூன் 25-ம் தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்கப்படுகிறது. அந்த 21 மாதங்களில் என்ன நடந்தது என்பதை நினைவில் கொள்வது மிகவும் முக்கியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், மத்திய சமூக நீதி துறை இணையமைச்சர் ராம்தாஸ் ஆத்வாலே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.