அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இரண்டு முன்னணி வேட்பாளர்களும் ‘வாழ்வுக்கு எதிரானவர்கள்’ எனக் கூறியுள்ளார் போப்பாண்டவர் பிரான்சிஸ். ‘குறைந்த தீமையானவரை’ (Lesser Evil) தேர்ந்தெடுங்கள் எனக் கத்தோலிக்க மக்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.
புலம்பெயர்ந்து வரும் மக்களை அனுமதிக்காமல் இருப்பது (ட்ரம்பைக் குறிப்பிட்டு) சாவான பாவம் எனக் கூறிய அவர், கமலாவின் கருக்கலைப்பு ஆதரவு நிலைப்பாட்டை ‘கொலை’ என விமர்சித்தார்.
“இருவரும் வாழ்வுக்கு எதிரானவர்கள். ஒருவர் புலம்பெயர்ந்து வருபவர்களை வெளியேற்றுபவர். மற்றொருவர் குழந்தைகளைக் கொல்பவர்” என வெள்ளி அன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியுள்ளார். போப், கமலா, ட்ரம்ப் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிடவில்லை.
உலகம் முழுவதும் இருக்கும் 140 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களில் 5.2 கோடி பேர் அமெரிக்காவில் வசிக்கின்றனர்.
அமெரிக்கக் கத்தோலிக்கர்கள் நிச்சயம் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார். “வாக்களிக்காமல் இருப்பது அசிங்கம், அது நல்லதல்ல. நீங்கள் நிச்சயம் வாக்களிக்க வேண்டும்” என்றார்.
விமானத்துக்குள் நடந்த பேட்டியில் அவர், “நீங்கள் குறைந்த தீங்கு விளைவிப்பவருக்கு (Lesser Evil) வாக்களிக்க வேண்டும். யார் குறைந்த தீங்கு விளைவிப்பவர்? அந்த பெண்மணி, அல்லது அந்த ஆண்? யாரென்று எனக்குத் தெரியாது. நீங்கள் மனசாட்சிக்கு உட்பட்டு, சிந்தித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும்” என்றார்.
கத்தோலிக்க கிறிஸ்தவ மத கட்டுப்பாடுகளின் படி கருக்கலைப்பு கொடிய செயல் என்பதால், “குழந்தையை தாயின் கருவிலிருந்து கட்டாயப்படுத்தி வெளியேத் தள்ளுவது கொலை. ஏனென்றால் அங்கே ஒரு உயிர் இருக்கிறது.” எனத் தொடர்ந்து அவர் பேசி வருகிறார்.
“புலம்பெயர்ந்து வருபவர்களை விரட்டுவது, அவர்கள் வளரவிடாமல், வாழ விடாமல் தடுப்பது பாவம்” என்றும் அவர் கூறியுள்ளார்.
ட்ரம்ப் குறித்து 2016ம் ஆண்டிலேயே “அவர் கிறிஸ்தவர் அல்ல” என விமர்சித்திருந்தார் போப்.