ஜம்மு: காங்கிரஸ், தேசிய மாநாடு, மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த 3 குடும்பங்கள் காஷ்மீரின் வளர்ச்சியை அழித்தன என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டி உள்ளார். ஜம்மு காஷ்மீரின் தோடா பகுதியில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அவர் பேசியதாவது:
மிக நீண்ட காலமாக காஷ்மீரில் வாரிசு அரசியல் நீடித்து வருகிறது. காங்கிரஸ், தேசிய மாநாடு, மக்கள்ஜனநாயக கட்சியை சேர்ந்த 3 குடும்பங்கள் காஷ்மீரின் வளர்ச்சியை அழித்துள்ளன. வாரிசு அரசியலுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும். 370-வது சட்டப்பிரிவை மீண்டும் கொண்டு வருவோம் என்று சிலர் கூறுகின்றனர். இதனால் காஷ்மீர் மக்களுக்கு எந்த பலனும் இல்லை. குறிப்பிட்ட 3 குடும்பங்களை சேர்ந்தவர்கள் மட்டுமே பலன் அடைவார்கள்.
ஒரு காலத்தில் காஷ்மீரில் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. தற்போது காஷ்மீர் மக்கள் தங்கள் கனவுகளை, நனவாக்க அதிதீவிரமாக உழைத்து வருகின்றனர். புதிய ஜம்மு, புதிய காஷ்மீர் உருவாகி வருகிறது. மதம், நம்பிக்கை, சமூக பாகுபாடு இன்றி அனைத்து தரப்பு மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஜம்மு-காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும்.
காங்கிரஸை சேர்ந்த ராஜ குடும்பத்தினர் மிகப்பெரிய ஊழல்வாதிகள். அந்த கட்சியில் நேர்மை இல்லை. காங்கிரஸ் குறித்து காஷ்மீர் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காங்கிரஸும் அதன் கூட்டணி கட்சியான தேசியமாநாட்டு கட்சியும் ஜம்மு பகுதியை புறக்கணித்ததை யாரும் மறக்கவில்லை. அமெரிக்காவில் இந்திய செய்தியாளரை காங்கிரஸார் தாக்கி உள்ளனர். வங்கதேச இந்துக்களின் நிலை குறித்து கேள்வி எழுப்பியதற்காக அவர் தாக்கப்பட்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சி ஜனநாயகத்தை அழித்து வருகிறது. பாதுகாப்பான, வளமான காஷ்மீரை உருவாக்க பாஜகவுக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
ஹரியானாவில் பிரச்சாரம்: ஹரியானாவின் குருஷேத்திரத்தில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
நேரு பிரதமராக இருந்தபோது இடஒதுக்கீட்டை எதிர்த்தார். இடஒதுக்கீட்டில் உள்ளவர்களுக்கு வேலை கிடைத்தால் அரசுப் பணியின் தரம் கெட்டுவிடும் என்று அவர் கூறினார். ஓபிசி இடஒதுக்கீட்டுக்காக அமைக்கப்பட்ட காக்கா காலேல்கர் கமிஷன் அறிக்கையை நேரு கிடப்பில் போட்டார். இந்திராகாந்தி வந்தவுடன் ஓபிசி இடஒதுக்கீட்டுக்கும் தடை விதித்தார். நாடு அவரை தண்டித்தபோது, ஜனதா கட்சி ஆட்சி அமைக்கப்பட்டது. பின்னர் மணடல் கமிஷன் உருவாக் கப்பட்டது.
பின்னர் காங்கிரஸ் வந்து மண்டல் கமிஷன் அறிக்கையை கிடப்பில் போட்டது. இதற்குப் பிறகு,ராஜீவ் காந்தியும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு பெற அனுமதிக்கவில்லை.
காங்கிரஸ் ஆட்சியில் கர்நாடகாவில் விநாயகர் சிலையைக் கூட சிறையில் தள்ளும் சூழல் உருவாகியுள்ளது. இன்றைய காங்கிரஸ், நகர்ப்புற நக்சல்களின் புதிய வடிவமாக மாறியுள்ளது. அந்த கட்சியைவிட நேர்மையற்ற, வஞ்சகமான கட்சி வேறு எதுவும் இல்லை.
விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழைகள், பெண்களின் நலன்களில் பாஜக மிகுந்த அக்கறை கொண்டு உள்ளது. விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் இதுவரை ரூ.3.25 லட்சம் கோடி செலுத்தப்பட்டு உள்ளது.
50 ஆண்டு வரலாறு: மத்தியில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைத்துள்ளது. இதேபோல ஹரியானாவிலும் பாஜக 3-வது முறையாக அமைக்க மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். மத்தியில் யார் ஆட்சி அமைக்கிறார்களோ, அவர்களே ஹரியானாவிலும் ஆட்சி அமைப் பார்கள். இது 50 ஆண்டு கால வரலாறு. இந்த முறையும் இதே வரலாறு தொடரும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.