புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த வழக்கில் அவருக்கு உச்ச நீதிமன்றம் கடந்த செப்.13-ம் தேதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து சிறையிலிருந்து அவர் அன்று மாலையே வெளியே வந்தார். இதனையடுத்து, இன்று (செப்.15) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடுத்த 48 மணி நேரத்துக்குள் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளார். இது டெல்லி அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், முதல்வர் பதவியை கேஜ்ரிவால் ராஜினாமா செய்த பிறகு டெல்லியில் அடுத்த முதல்வர் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. இதில் ஆம் ஆத்மி கட்சியின் சில முக்கிய புள்ளிகளின் பெயர்களும் அடிபடத் தொடங்கியுள்ளன.
அதிஷி: அரவிந்த் கேஜ்ரிவால் கைதுக்குப் பிறகு செய்திகளில் அதிகம் இடம்பெற்றவர் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், டெல்லி அமைச்சருமான அதிஷி. ஒரு நிழல் முதல்வராக இருந்து பல்வேறு முக்கிய துறைகளை கவனித்துக் கொண்டார். ஆம் ஆத்மி கட்சியில் சிறந்த பேச்சாளர்களில் ஒருவரான இவர், டெல்லியின் அடுத்த முதல்வர் பட்டியலில் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைலாஷ் கெலாட்: டெல்லியின் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருக்கும் கைலாஷ், டெல்லி அரசியல் வட்டாரத்தில் ஒரு முக்கியப் புள்ளியாக பார்க்கப்படுபவர். மின்சார வாகனங்களை அறிமுகம் செய்தது, பேருந்து சேவை விரிவாக்கம் என டெல்லி அரசின் பல முக்கிய திட்டங்களின் பின்னணியில் இருந்தவர். கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நீண்ட அரசியல் அனுபவமும் கொண்டவரான இவருக்கும் டெல்லி முதல்வராக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
சுனிதா கேஜ்ரிவால்: அரவிந்த் கேஜ்ரிவாலின் மனைவியான சுனிதா, முன்னால் ஐஆர்எஸ் அதிகாரி. 20 ஆண்டுகளுக்கும் மேலாக வருமான வரித்துறையிலும் பணியாற்றிவர். கடந்த மக்களவைத் தேர்தலில் டெல்லி, ஹரியானா, குஜராத் மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய பிரச்சாரகர்களின் ஒருவராக இருந்தவர். கேஜ்ரிவால் சிறையில் இருந்தபோது தொடர்ந்து ஊடகங்களில் தோன்றி தன் கணவரது செய்திகளை தெரிவித்ததன் மூலம், மக்களுக்கு பரிச்சயமானவராக அறியப்படுகிறார்.
கோபால் ராய்: டெல்லி அரசியலில் அனுபவம் வாய்ந்த மற்றொரு நபர். சுற்றுச்சூழல் அமைச்சராக இருக்கும் கோபால் ராய், தன்னுடைய இளம் வயதில் மாணவர் போராட்டத்தின் போது கையில் சுடப்பட்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர். மார்க்சிஸ்க் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கிய இவருக்கு உழைக்கும் வர்க்கத்தினர் மத்தியில் நல்ல அறிமுகம் உண்டு.