பாலிவுட் நட்சத்திரங்கள் எப்போதும் வெளியில் வரும் போது சொந்தமாக பாதுகாவலர்கள் வைத்துக்கொள்வது வழக்கம். அந்தப் பாதுகாவலர்கள் நடிகர்களின் அருகில் யாரையும் அனுமதிக்காமல் பாதுகாப்பு அரணாகத் திகழ்கின்றனர்.
நடிகர்கள் எப்போது வெளியில் வந்தாலும் அவர்களை ரசிகர்கள் சூழ்ந்து கொள்வது வழக்கம். அது போன்ற நேரங்களில் ரசிகர்களிடமிருந்து நடிகர்களை தனியார் செக்யூரிட்டிகள்தான் பாதுகாப்பு கொடுக்கின்றனர். சில நேரங்களில் ரசிகர்களிடம் தனியார் பாதுகாவலர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட சம்பவங்களும் நடந்திருக்கிறது. சில நடிகர்கள் ஒரே பாதுகாவலரை பல ஆண்டுகளாக தங்களது சொந்த பாதுகாப்புக்கு வைத்திருக்கின்றனர். நடிகர் சல்மான், ஷாருக்கானிடம் பாதுகாவலர்களாக இருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்படி பாதுகாப்பு கொடுக்கும் பாதுகாவலர்களுக்கு நடிகர்கள் சம்பளத்தை கோடிகளில் அள்ளிக்கொடுக்கின்றனர்.
நடிகர் சல்மான் கானுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு கூடுதலாக போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கானிடம் பாதுகாவலராக இருக்கும் ரவி சிங் 10 ஆண்டுகளாக இந்த வேலையை ஷாருக்கானுக்காக செய்து வருகிறார். இதற்காக ரவி சிங்கிற்கு ஷாருக் கான் ஆண்டுக்கு ரூ.2.7 முதல் 3 கோடி வரை சம்பளம் கொடுக்கிறார். இதே போன்று சல்மான் கானுக்கு பாதுகாப்பு கொடுக்கும் குர்மீத் சிங் ஷெரா கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பணியைச் செய்து வருகிறார். சல்மான் கான் குடும்பத்தில் ஒருவராகவே வாழும் ஷெராவிற்கு ஆண்டுக்கு 2 கோடி வரை சம்பளமாகக் கொடுக்கிறார் சல்மான் கான்.
இதே போன்று நடிகர் ஆமீர் கானுக்கு பாதுகாப்பு கொடுத்து வரும் யுவராஜ் கொர்படே ஆண்டுக்கு 2 கோடி சம்பளம் வாங்குகிறார். யுவராஜ் முன்பு பாடிபில்டராக இருந்து வந்தார். நடிகர் அமிதாப்பச்சனுக்கு பாதுகாப்பு கொடுக்கும் ஜிதேந்திர ஷிண்டெ சொந்தமாக செக்யூரிட்டி ஏஜென்சி நடத்தி வருகிறார். ஜிதேந்திராவிற்கு அமிதாப்பச்சன் ஆண்டுக்கு ரூ.1.5 கோடியை சம்பளமாக கொடுக்கிறார்.
ஜிதேந்திரா முன்பு போலீஸாக இருந்தார். அரசு சார்பாக பாதுகாப்பு கொடுத்த போது ஜிதேந்திராவை அமிதாப்பச்சன் பாதுகாப்புக்கு அரசு அனுப்பியது. ஆனால் அவர் அமிதாப் பச்சனுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டு தனது மனைவி பெயரில் சொந்தமாக செக்யூரிட்டி ஏஜென்சி தொடங்கி பாலிவுட் பிரபலங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வேலையைச் செய்து வந்தார். இதனால் அவர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அப்படி இருந்தும் அவர் அமிதாப்பச்சனுக்கு பாதுகாப்பு கொடுத்து வருகிறார்.
நடிகர் அக்ஷய் குமார் மற்றும் அவரது மகன் ஆரவ் ஆகியோருக்கு பாதுகாப்பு கொடுக்கும் ஸ்ரேயாஸ் தாலே என்பவர் ஆண்டுக்கு ரூ.1.2 கோடியை சம்பளமாக பெறுகிறார். நடிகர் ஹர்த்திக் ரோஷனுக்கு பாதுகாப்பு கொடுத்து வரும் மயூர் ஆண்டுக்கு ரூ.1.2 கோடியை சம்பளமாகப் பெறுகிறார். பாலிவுட்டில் பிரபலமாக விளங்கும் நடிகை தீபிகா படுகோனேவிற்கு ஜலால் என்பவர் பாதுகாப்பு கொடுக்கிறார். அவருக்கு தீபிகா படுகோனே ரூ.1.2 கோடியை சம்பளமாக கொடுக்கிறார். நடிகை அனுஷ்கா சர்மா, அவரது கணவர் விராட் கோலி மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு பொறுப்பு வகிக்கும் பிரகாஷ் சிங்கிற்கு ஆண்டுக்கு ரூ1.2 கோடி சம்பளம் கொடுக்கப்படுகிறது. இது தவிர ஐஸ்வர்யா ராய் போன்ற நடிகைகள், நடிகர்களும் சொந்தமாக பாதுகாவலர்கள் வைத்திருக்கின்றனர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…