இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளராக இருப்பவர் முகமது ஷமி. இவரும் ஜஸ்பிரித் பும்ராவும் ஒரே அணியில் விளையாடினால், நிச்சயம் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனம் தான். ஆனால், அவர் சமீப காலமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. காயம் ஏற்பட்டதால் டி20 உலகக்கோப்பையில் கூட முகமது ஷமி விளையாட முடியாமல் போனது. இந்நிலையில் பெங்கால் கிரிக்கெட் சங்கம் நடத்திய விருது விழாவில் கலந்து கொண்ட முகமது ஷமி இப்போது முழு உடல் தகுதியை எட்டிவிட்டதாகவும், விரைவில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஷமி எப்போது திரும்புவார்?
அந்த நிகழ்ச்சியில் பேசிய முகமது ஷமி, ” அடுத்த சீசனில் பெங்கால் அணிக்காக கண்டிப்பாக விளையாட விரும்புகிறேன். ரஞ்சியில் பெங்கால் அணிக்காக இரண்டு முதல் மூன்று போட்டிகளில் விளையாடுவேன் என்று நம்புகிறேன். சர்வதேச கிரிக்கெட்டில் நான் மீண்டும் வருவதற்கு இது உதவும். நான் நேஷனல் கிரிக்கெட் அகாடமியில் (NCA) பயிற்சி எடுத்து வருகிறேன், நான் முழு உடல் தகுதியுடன் இருக்கும்போது, நான் விளையாட விரும்புகிறேன்.” என கூறினார். முகமது ஷமி உத்தரபிரதேசத்தில் பிறந்தவர். ஆனால், அவருக்கு முதல் முறையாக பெங்கால் அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.
மேற்கு வங்கதுக்கு நன்றி
2011 ஆம் ஆண்டு முகமது ஷமி பெங்கால் அணிக்காக 15 முதல் வகுப்பு மற்றும் 15 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடினார். அதன் பிறகு ஜனவரி 2013 ஆம் ஆண்டு டெல்லியில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ODI அணியில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. 2023 உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக கவுரவிக்கப்பட்ட ஷமி, ‘பெங்கால் அணிக்கு என்னால் போதுமான நன்றி சொல்ல முடியாது. உ.பி.யில் வாய்ப்புகள் அதிகம் இல்லாத குடும்பத்தில் பிறந்தேன். ஆனால் என்னை உருவாக்கியது பெங்கால் தான்” என உணர்ச்சிப்பூர்வமாக பேசினார்.
வாழ்க்கையை நினைவுகூர்ந்த ஷமி
ஷமி மேலும் கூறுகையில், ‘இது 22 ஆண்டுகால பயணம், என்னை இந்த நிலைக்கு கொண்டு சென்றதற்காக பெங்கால் அரசுக்கு முழு மனதுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பெங்கால் எனக்கு அளித்த அன்பையும் ஆதரவையும் என்னால் மறக்கவே முடியாது. பெண்கள் கிரிக்கெட்டும் முன்னேற வேண்டும் என்று விரும்புகிறேன். மக்கள் பாகுபாடு காட்டாமல், அவர்களுக்கு ஆதரவாக இருந்தால், நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்” என கூறினார்.
கவாஸ்கர் டிராபி அப்டேட்
டிசம்பரில் தொடங்கவுள்ள பார்டர்-கவாஸ்கர் டிராபி குறித்தும் ஷமி தனது கருத்தை தெரிவித்தார். இந்த ஆண்டு நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா முன்னிலை வகிக்கும் என்று ஷமி தெரிவித்தார். அவர் பேசும்போது, ’இந்த தொடரை வெல்ல இந்தியா வலுவான போட்டியாளராக இருப்பதாக நான் நினைக்கிறேன். கடந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில், பல மூத்த வீரர்கள் இல்லாத இளம் அணியுடன் விளையாடினோம், ஆனாலும் நாங்கள் சிறந்தவர்கள் என்பதை நிரூபித்தோம். அடுத்த தொடர் கடினமாக இருக்கும் என்று நினைக்கிறேன், ஆனால் இந்தியா கண்டிப்பாக வெற்றி பெறும்” என தெரிவித்தார்.