`பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உணவருந்தலாம்' – மிளகு தரும் நலன்கள்| Health Tips | Pepper

மிளகுப்பற்றிய சில வரலாற்று செய்திகளையும் அதன் மருத்துவப் பலன்களையும் சொல்கிறார் சித்த மருத்துவர் பி. மைக்கேல் செயராசு

* தென் மாவட்டங்களில் மிளகை பற்றி உலவுகிற கதை இது. ‘பாண்டிய நாட்டு வியாபாரிகள் நம் நாட்டு மிளகுக்கொடிகளை அறுத்துச் செல்கிறார்கள்’ எனக் காவல்காரர்கள் திருவனந்துபுரத்து மன்னரிடம் முறையிட, ‘அவர்கள் மிளகுக்கொடிகளை கொண்டு செல்லலாம்; ஆனால், இங்கிருக்கும் மேகப் பொதிகளைக் கொண்டு செல்ல முடியாதே’ என்று பதிலளித்தாராம் மன்னர். மேகங்கள் சூழ்ந்திருந்தால் மட்டுமே மிளகுக்கொடி பூக்கும்; காய்க்கும்.

* அந்தக் காலத்தில் பகைவர்களுக்கு மெள்ள மெள்ளக் கொல்லும் நஞ்சை உணவுடன் கலந்து கொடுத்து விடுவார்களாம். இதை உண்டவர்கள் சில மாதங்கள் கழித்து இறந்து விடுவார்களாம். அதை பாஷாண நஞ்சு என்பார்கள். இந்த நஞ்சை முறிக்கும் மருத்துவ குணம் மிளகுக்கு உண்டு. அதனால்தான், `பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உணவருந்தலாம்’ என்ற பழமொழி உருவானது.

Pepper

* மிளகின் இன்னொரு பெயர் கறி. மிளகாய் வருவதற்கு முன்பு நம் சமையலறையில் காரத்துக்குக் கைகொடுத்தது மிளகுதான். அதனால்தான், காரம் சேர்த்து சமைத்த காய்கறி சமையலுக்கெல்லாம் கறி என்று பெயர் சூட்டினார்கள் முன்னோர்கள்.

* சீசர் ரோமாபுரியை ஆண்டுகொண்டிருந்தபோது, தங்கம் கொடுத்து மிளகை வாங்கியிருக்கிறார்கள். ஒருமுறை, ‘கஜானாவிலிருந்த தங்கமெல்லாம் தீர்ந்துவிட்டது. மிளகை கப்பலிலிருந்து இறக்க வேண்டாம்’ என சீசர் சொன்னதாக வரலாறு சொல்கிறது.

* மிளகைக் காயாகப் பறித்துப் பதப்படுத்தினால் கறுப்பு மிளகு. மிளகைப் பழுக்க வைத்து, அதை ஊற வைத்து, தோல் நீக்கி, சுண்ணாம்பு நீரில் சுத்திகரித்தால், வெள்ளை மிளகு கிடைக்கும். அல்சர் இருப்பவர்கள் வெள்ளை மிளகைச் சாப்பிடலாம்.

* தலைவலி, ஒற்றைத்தலைவலி, மூக்கடைப்பு இருந்தால், தினமும் காலை, மாலை சாப்பாட்டுக்குப் பிறகு அரை கிராம் மிளகும் ஒரு கிராம் வெல்லமும் சாப்பிட்டு வர குணமாகும்.

* மிளகு, உப்பு, வெங்காயம் மூன்றையும் அரைத்து தலையில் தடவ புழு வெட்டு குணமாகும்.

* தலையில் மிளகுத்தைலம் தேய்த்து வர, நாள்பட்ட காதுகேளா தன்மையும் தலைவலியும் குணமாகும் என்கிறார் தேரையர்.

* சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய திரிகடுகு இல்லாமல் சித்த மருத்துவம் செய்ய முடியாது. இவற்றில் சுக்கு வாதம் போக்கும், மிளகு பித்தத்தை சமப்படுத்தும், திப்பிலி கபத்தை சமப்படுத்தும்.

* ஆஸ்துமா மற்றும் மூக்கடைப்புக்கு மிளகைச் சுட்டு அதன் புகையை உள்ளிழுக்கலாம்.

மைக்கேல் ஜெயராசு

* வேலிப்பருத்தி சாற்றில் மிளகை ஊறவைத்து, காயவைத்து, பொடி செய்து, அடிக்கடி சளிபிடிக்கும் குழந்தைகளுக்கு மருந்தாகக் கொடுக்கும் பழக்கம் இன்றைக்கும் கிராமங்களில் இருக்கிறது.

* மிளகு, ஏலக்காய், கிராம்பு, சாதிக்காய் ஆகியவற்றின் எண்ணெயை எடுத்துவிட்டு, தூளாக்கி பாக்கெட்டில் விற்கிறார்கள் என்பதால், இவற்றைப் பொடியாகக் கடைகளில் வாங்குவதைத் தவிர்க்கலாம்.

விகடன் Whatsapp சேனலுடன் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்: https://whatsapp.com/channel/0029Va7F0Hj0bIdoYCCkqs41

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.