நாட்டில் புற்றுநோயாளர்களின் நோய்களை கண்டுபிடித்தல் மற்றும் அதனை கண்காணித்தல் போன்றவற்றை மேற்கொள்ளும் பெட் ஸ்கேனர் இயந்திரத்திற்குத் தேவையான புளோரோடாக்சிகுளுக்கோஸ் (FDG) உற்பத்திக்கு அவசியமான முதலீடு மற்றும் வசதிகளை வழங்குவதற்காக நிலைபேறான செயற்பாட்டின் பின்னர், இலங்கை அணுசக்தி சபை மற்றும் சுகாதார அமைச்சு என்பன ஒன்றிணைந்து எக்ஸஸ் சர்வதேச நிறுவனத்துடனான ஒப்பந்தம் ஒன்றில் நேற்று (14) கையெழுத்திடப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் அரசாங்க வைத்தியசாலைகளில் வாரத்துக்கு ஒரு தடவை பயன்படுத்தப்படும் பெட் ஸ்கேனர் இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
அதனால் பெட் ஸ்கேனர் இயந்திரத்திற்கு அவசியமான இரசாயன பதார்த்தங்களான புளோரோடாக்சிகுளுக்கோஸ் (FDG) ஐ இந்தியாவிலிருந்து வாரத்திற்கு ஒரு தடவை இறக்குமதி செய்யப்படுவதுடன், 97% வீதமான இறக்குமதி விரயமாகின்றது.
இதனால் நோயாளர்களுக்கு செலவாகும் செலவு அதிகரிப்பதனால் அரசாங்க வைத்தியசாலைகளில் பெட் ஸ்கேனர் செயற்பாடு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தனியார் வைத்தியசாலைகளில் இந்த ஸ்கேனர் வசதிகளுக்காக 285,000 ரூபா செலவாவதுடன் இந்தியாவில் இது 40, 000 ரூபா எனும் குறைந்த செலவில் காணப்படுகிறது.
இவ்வாறு நேற்று(14) கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தினால் பெட் ஸ்கேனர் பரிசோதனைகளுக்காக அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் குறைந்த செலவில் அதிகளவான பெட் ஸ்கேனர் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.