மும்பை: மகாராஷ்டிரா பால்கர் மாவட்ட பள்ளிக்கூட அறிவியல் ஆசிரியர் தர்ஷன். இவரது மகன் ஸ்மித் பந்தாரே (12) மற்றும் மகள் சன்ஸ்கிருதி (9) ஆகிய இருவரும்கடந்த ஆக.25-ம் தேதி வாரவிடுமுறை நாள் என்பதால் வீட்டில்மதியம் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்நேரம் பலத்த காற்றுடன் கனமழை பெய்து கொண்டிருந்தது.
திடீரென பலத்த சத்தம் வீட்டருகில் கேட்டது. நடந்தது என்ன என்பதை பார்க்க அண்ணன், தங்கை இருவரும் இரண்டாவது மாடியில் உள்ள தங்களது வீட்டின்பால்கனிக்கு ஓடிச் சென்றனர். அப்போது பக்கத்து அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ளமின்கம்பத்திலிருந்து உயர் மின்னழுத்தக் கம்பி அறுந்து விழுந்திருப்பதைக் கண்டனர். தான் பள்ளியில் படித்த மின்கடத்தி பாடம் ஸ்மித் பந்தாரேவுக்கு சட்டென நினைவுக்கு வந்தது. இதுபோன்ற அறுந்து விழுந்த மின்கம்பி வழியாக மின்சாரம் கடத்தப்படும் என்பதும் இது மிகவும் அபாயகரமானது என்றும் புரிந்து கொண்டார். யாரும் அந்த பக்கம் வர வேண்டாம் என்று தனது வீட்டின் பால்கனியில் இருந்தே அண்ணனும் தங்கையும் குரல் கொடுத்தனர். இதனால் பக்கத்துவீட்டுப் பையனான முகமதுஅன்சாரி (10) அறுந்து விழுந்த மின்கம்பி மீது கால் வைக்காமல் உயிர் தப்பினார்.
நடந்ததைக் கண்டவுடன் ஆசிரியர் தர்ஷன் உடனடியாக மகாராஷ்டிரா மின்சார வாரியத்திடம் புகார் அளித்தார். தந்தை அலைபேசி வழியாக புகார் கொடுத்துக் கொண்டிருந்த சமயத்தில், அறுந்த மின்கம்பி இருப்பது தெரியாமல் ஸ்கூட்டர் ஓட்டிவந்த ஒரு நபருக்கும் எச்சரிக்கை ஒலி எழுப்பி அவரையும் சிறுவர்கள் காப்பாற்றினர். சம்பவ இடத்துக்கு மின்வாரிய ஊழியர்கள் வந்து பழுது நீக்கும் பணியை மேற்கொள்ளும்வரை சிறுவர்கள் தெருவில் குடைபிடித்து நின்றபடி அக்கம்பக்கத்துக்கு மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுத்தபடி இருந்தனர். இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் கோவிந்த போத்கே மற்றும்காவல்துறையினர் சிறுவர்களின் நல்லெண்ணத்தையும் துணிகர செயலையும் பாராட்டியுள்ளனர்.