“விதிமீறல்… அனைத்து துறை அலுவலர்கள் கூட்டத்தை உதயநிதி நடத்த முடியுமா?" – ஆர்.பி.உதயகுமார்

“விஜய் மாநாடு நடத்தக் கூடாது என்பதற்காகவே பல்வேறு நிபந்தனைகளை விதிக்கின்றனர், புதியவர்களை வரவேற்க வேண்டும்…” என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு ‘வித்யா சேவா ரத்னா விருது’ வழங்கும் விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது,

ஆர்.பி.உதயகுமார்

முதல்வரின் வெளிநாட்டு முதலீடு

“அமெரிக்க பயணத்தை முடித்து விட்டு தமிழகம் வந்துள்ள முதல்வரால் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மிக குறைவாகவே பெறப்பட்டுள்ளது அரசு வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரிகிறது. மகாராஷ்டிரா, தெலுங்கானா முதலமைச்சர்கள் ஈர்த்து வந்த வெளிநாட்டு முதலீடுகளை ஒப்பிடும்போது தமிழகம் குறைவாகவே பெற்றுள்ளது. ஏற்கனவே இங்கே இருக்கிற கம்பெனிக்கு முதலீடை பெற்றுள்ளீர்கள். தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணம் தோல்வியில் முடிந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து வெள்ளை அறிக்கை கேட்டால் நக்கல் நையாண்டி செய்கிறார். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது வெளிநாட்டு முதலீடுகளை கொரோனா காலத்திலும் கொண்டு வந்தார். ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது எடப்பாடி பழனிசாமியிடம் வெள்ளை அறிக்கை கேட்டார். அதைத்தான் நாங்களும் கேட்கிறோம். மக்களுக்கு தெளிவுபடுத்தும் பணியை எதிர்க்கட்சிகள்தான் செய்யும்.

விதி, மரபுகளை மீறிய உதயநிதி

விளையாட்டு மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்கும் கூட்டத்தை நடத்த முடியுமா? முதலமைச்சருக்குத்தான் அந்த உரிமை உள்ளது. சிறப்பு திட்ட செயலாக்கத் துறையை ஜெயலலிதாதான் உருவாக்கினார். கிரைண்டர், மிக்சி வழங்கும் சிறப்புத் திட்டங்களை செயல்படுத்ததான் இந்த துறை உருவாக்கப்பட்டது. அந்த துறைக்கு அமைச்சராக இருந்துகொண்டு அனைத்து துறைகளையும் கேள்வி கேட்க முடியாது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

அதிகாரிகள் மீது சம்பந்தப்பட்ட அமைச்சரை வைத்து நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், அப்படி எங்கும் நடக்கவில்லை. விதிகளையும், மரபுகளையும் மீறி உதயநிதியை முன்னிறுத்த என்ன காரணம் என்று தெரியவில்லை. இதை அவர்கள்தான் சொல்ல வேண்டும். கட்சியில் அவரை முன்னிலைப்படுத்துவதை யாரும் குறை சொல்ல மாட்டார்கள், அதற்கு மக்கள் தீர்ப்பளிப்பார்கள். ஆனால், அரசில் முன்னிலை படுத்துவது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும். முதல்வரின் மகன் என்றால் அனைத்து துறைகளையம் ஆய்வு செய்யலாம் என்ற தவறான மரபை ஏற்படுத்திவிடக் கூடாது என்று நல்லெண்னத்தில் கூறுகிறோம்.

ஆட்சியில் பங்கு..

ஆட்சியில் பங்கு வேண்டும் என்று திருமாவளவன் வீடியோ பதிவிட்டதற்கும் பின்பு அதை நீக்கியது குறித்தும் அண்ணன் திருமாவளவன் விளக்கம் கூறியுள்ளார். ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கேட்பது அவர்களின் உரிமை. எல்லோரும் கட்சி நடத்துவதே ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருக்க வேண்டும் என்ற காரணத்தால்தான்.

ஆர்.பி.உதயகுமார் – திருமாவளவன்

இந்த கூட்டணி என்பதையே பேரறிஞர் அண்ணாதான் உருவாக்கினார். பிரிந்து கிடக்கும் சக்திகளை ஒன்றாக்கி அனைவரது பங்கேற்பையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அந்த காலத்திலேயே ஒரு மாநிலக் கட்சி தலைமையில் மெகா கூட்டணியை உருவாக்கினார். கூட்டணியில் உள்ளர்வர்களுக்கு கருத்து சொல்ல சுதந்திரமும், உரிமையும் உள்ளது.

அன்னபூர்னா உணவக விவகாரம் குறித்து எங்கள் கட்சியின் மூத்த தலைவர் ஜெயக்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதைத்தான் நானும் வழிமொழிகிறேன்.

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் கடந்த கால சாதனையை சொல்லி எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க மக்களை சந்திப்போம். அப்போது யார் யாரெல்லாம் அவர் கரத்தை வலுப்படுத்த ஆதரவு தருகிறார்களோ அது திருமாவளவன் உள்ளிட்ட யாராக இருந்தாலும், இணைத்துக்கொள்ள எடப்பாடி பழனிசாமிதான் முடிவெடுப்பார்.

விஜய் மாநாட்டுக்கு இவ்வளவு நிபந்தனைகள்…

புதிய கட்சிகள் தங்கள் பலத்தை காட்ட மாநாடு நடத்துவது வழக்கமான விஷயம்தான். ஆனால், விஜய் மாநாட்டுக்கு இவ்வளவு நிபந்தனைகள் விதிப்பது இதுவரை கேள்விப்படாத ஒன்று. பாதுகாப்பாக மாநாடு நடக்க வேண்டும் என்பதற்காக நிபந்தனைகள் விதிப்பது வழக்கம்தான், ஆனால், மாநாடு நடக்கவே கூடாது என்பதற்காக நிபந்தனைகள் விதிக்கின்றனர். விஜய், சமுதாயத்துக்கு சேவை செய்ய வேண்டுமென்று முன் வருகிறார். அதை வரவேற்கத்தானே வேண்டும். திமுக அமைச்சர்கள் விஜய்யை விமர்சிக்க அவர்களின் தலைமைதான் காரணம். தலைமையின் கருத்தைத்தான் அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.

நடிகர் விஜய்

சமீபத்தில் திருமங்கலம் பகுதியில் திமுக நடத்திய கூட்டத்தில் வழங்கப்பட்ட உணவு கெட்டுப்போயுள்ளது. கட்சி கூட்டங்களில் உணவுகள் வழங்கப்படும்போது கவனமாக இருக்க வேண்டும், பசிக்கு உணவு வழங்கும் போது உயிருக்கே ஆபத்தாகிவிடக் கூடாது, எடப்பாடியாரின் உத்தரவின் பேரில் பாதிக்கப்பட்டவர்களை சென்று பார்த்தேன்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.