புதுடெல்லி: குஜராத்தின் காந்திநகர் மாவட்டம், தேகாம் பகுதியில் நேற்று முன்தினம் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. இதன் பிறகு 9 பக்தர்கள் அங்குள்ள ஆற்றில் குளித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக 8 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். நீச்சல் வீரர்கள் பல மணி நேரம் ஆற்றில் தேடி 8 பேரின் உடல்களை மீட்டனர்.
உயிரிழந்த 8 பேரும் நெருங்கிய உறவினர்கள் என்று போலீஸார் தெரிவித்தனர். ஆற்றில் மூழ்கி இறந்த ஜஸ்பால் என்பவரின் மனைவி 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். சிராக் என்பவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. உயிரிழந்த 8 பேரும் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
குஜராத்தின் தேகாம் பகுதியில் 8 பேர் உயிரிழந்த தகவல் அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன். உயிரிழந்தவர் களின் குடும்பங்களுக்கு பிரதமரின்தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.