புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விவசாயிகளின் நலன் கருதி 3 முக்கிய முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளது.
அதில் முக்கியமானது வெங்காயம் மற்றும் பாசுமதி அரிசிக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை அகற்றுவது. வெங்காயத்துக்கான ஏற்றுமதி வரி 40 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது வெங்காய ஏற்றுமதியை அதிகரிக்கும். இதன் மூலம் வெங்காய விவசாயிகளின் வருமானம் பெருகும்.
பாசுமதி அரிசிக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையும் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் அதிக லாபம் அடையலாம். சோயாபீன்ஸ் விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பதற்காக, கச்சா பாமாயில், சோயா மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி 12.5 சதவீதத்திலிருந்து 32.5 சதவீதமாகவும், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களுக்கான இறக்குமதி வரி 13.75 சதவீதத்திலிருந்து 35.75 சதவீதமாகவும் உயர்த்தப்படும். இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.