2026-ல் இபிஎஸ் தலைமையில் அதிமுக ஆட்சி அமையும்: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நம்பிக்கை

கோவை: 2026-ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும் என, முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக தலைமை நிலைய செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுகவினர் ஊர்வலமாக சென்று கோவை அவிநாசி சாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்நிகழ்வில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது: “பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்தநாள் விழா கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பேரிறிஞர் அண்ணா சாதாரண மக்களும் அரசியலில் உயர்ந்த பதவிகளுக்கு வரலாம் என்ற நிலையை உருவாக்கினார். மேலும் கோவைக்கு எண்ணற்ற திட்டங்களை தந்தவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் இன்று அதிமுக ஆட்சியில் துவங்கப்பட்ட எந்த திட்டமும் திமுக ஆட்சியில் முழுமையாக நிறைவேறவில்லை. மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்படுவதில்லை.

கோவையிலும் கேரளா மாநில மக்கள் பலர் வசிக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் ஓணம் திருநாள் வாழ்த்துகள். 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைப்போம்” இவ்வாறு வேலுமணி தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.