IND vs BAN: பங்களாதேஷ் தொடரில் இருந்து சுப்மான் கில் நீக்கம்? காரணம் இது தான்!

India vs Bangladesh: ஒரு மாதத்திற்கு பிறகு வரும் 19ஆம் தேதி இந்திய அணி பங்களாதேஷ்க்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. கடைசியாக இலங்கைக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தது. அங்கு டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றும், ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தும் நாடு திரும்பியது. இந்நிலையில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முழு இந்திய அணியும் விளையாட உள்ளது. ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ஜடேஜா போன்ற சீனியர் வீரர்கள் இந்த தொடரில் இடம் பெற்றுள்ளனர். மொத்தம் இரண்டு டெஸ்ட் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட பங்களாதேஷ் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது, இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. 

 

இந்நிலையில் அக்டோபர் 7ம் தேதி தொடங்கும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்து இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மான் கில்லுக்கு ஓய்வு வழங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.  இந்திய அணியில் ஓப்பனிங் வீரராக இருந்து வரும் சுப்மான் கில் ஜிம்பாப்வே தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்டார். மேலும் இலங்கை தொடரில் துணை கேப்டன் ஆகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். டி20, டெஸ்ட், ஒரு நாள் என எந்த தொடராக இருந்தாலும் சுப்மான் கில் அணியில் நிச்சயம் இடம்பெற்று வருகிறார்.  பங்களாதேஷ் தொடர் முடிந்ததும் நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இதனை மனதில் வைத்து சுப்மான் கில்லுக்கு டி20  தொடரில் இருந்து ஓய்வு வழங்கப்படும் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

” பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 போட்டிகள் அக்டோபர் 7 (குவாலியர்), 10 (டெல்லி) மற்றும் 13 (ஹைதராபாத்) ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இவை முடிந்ததும் அக்டோபர் 16ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது, எனவே சுப்மான் கில் போன்ற வீரருக்கு இந்த சமயத்தில் தக்க ஓய்வு அவசியம்” என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கில் இதுவரை 21 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி 1 சதம், 3 அரைசதங்கள் அடித்துள்ளார். அடுத்தடுத்து டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளதால் வங்கதேசத்துக்கு எதிராக டி20 போட்டிகளில் முக்கிய வீரர்கள் இடம் பெற வாய்ப்பில்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ரோஹித், விராட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் டி20 தொடரில் இடம் பெற வாய்ப்பில்லை. பந்த் ஓய்வெடுக்கும் பட்சத்தில், இஷான் கிஷான் மீண்டும் பரிசீலிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.