கொல்கத்தா மருத்துவ மரணத்துக்கு நீதி கேட்டுப் போராடும் ஜூனியர் மருத்துவர்கள் – மேற்கு வங்க அரசு இடையே சமரசம் எழாத சூழல் நிலைக்கிறது.
சனிக்கிழமை மம்தா பானர்ஜியைச் சந்திக்க மருத்துவர்கள் குழு, முதல்வர் இல்லத்துக்குச் சென்றபோதிலும் எந்த பேச்சு வார்த்தையும் நிகழாமல் திரும்பியுள்ளனர்.
மருத்துவர்கள் குழு சந்திப்பை இருதரப்பிலும் வீடியோ பதிவு செய்ய அனுமதி கேட்டனர். அரசு தரப்பில் வீடியோ பதிவுக்கு மறுத்துவிட்டதால் மருத்துவர்கள் முதல்வரைச் சந்திக்கவில்லை.
மருத்துவர்கள் சந்திப்புக்குத் தயாராக இல்லாத நிலையில், “தயவு செய்து உள்ளே வாருங்கள். நீங்கள் சந்திப்பு நடத்த விரும்பவில்லை என்றாலும், ஒரு கப் தேநீராவது அருந்துங்கள். உங்களுக்காக இரண்டு மணிநேரம் காத்திருக்கிறோம். என் தலைமைச் செயலாளர், என் டிஜி போலீஸ், என் ஐபி தலைவர், என் உள்துறைச் செயலாளர் அனைவரும் உங்களுக்காகக் காத்திருக்கிறார்கள். நீங்கள் உட்காருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.” எனக் கேட்டுக்கொண்டார் மமதா பேனர்ஜி.
அரசு தரப்பில் மட்டுமே வீடியோ எடுக்கப்படும் என்றும், உச்ச நீதிமன்றம் அனுமதித்தால் மட்டுமே வீடியோவை பகிர முடியும் என்றும் அரசு தரப்பில் தெரிவித்துள்ளனர்.
வீடியோ பதிவு, நேரலை ஒளிபரப்பு இல்லாமல் முதல்வரைச் சந்திக்க மருத்துவர்கள் குழு முடிவு செய்தபோது, “மிகத் தாமதமாகிவிட்டது” என அரசுத் தரப்பில் கூறியதாக மருத்துவர் குழு பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவர்கள் முதல்வர் இல்லத்துக்குச் செல்லும் முன், மம்தா பானர்ஜி போராட்டம் நடைபெறும் சால்ட் லேக் பகுதிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
அதன்பிறகு, “நான் முதல்வராக அல்ல, உங்கள் அக்காவாக அங்கு வந்தேன். இந்தப் பிரச்னையைத் தீர்க்க இதுவே என் கடைசி முயற்சி” எனத் தெரிவித்திருந்தார்.
போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட மம்தா பேனர்ஜி, போராடும் மருத்துவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது என உறுதியளித்தார்.
ஆனால், மருத்துவர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தைக் கைவிட முடியாது எனத் தெரிவித்துள்ளனர். கொல்கத்தா காவல்துறை கமிஷனர், சுகாதாரத்துறை தலைமை அதிகாரிகளை நீக்குவது உள்ளிட்ட 5 கோரிக்கைகளை முன் வைத்து மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.
போராட்டக்காரர்களுக்கு ஆதரவளித்துவரும் வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட மருத்துவரின் தாய், “எங்களது ஐந்து கோரிக்கைகள் விரைவாக நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் கூறுகிறார். ஆனால் மாநில நிர்வாகமும், சுகாதாரத்துறையும் காவல்துறையும் குற்றத்தில் சம்பந்தப்பட்டிருப்பதை அனைவருமே அறிவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளி அன்று போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்கள், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் எனக் கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.