’96’ திரைப்படத்தை இயக்கிய பிரேம் குமாரின் அடுத்தத் திரைப்படம் இந்த ‘மெய்யழகன்’.
கார்த்தி, அரவிந்த் சுவாமி, ராஜ்கிரண், ஸ்ரீ திவ்யா, தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடித்திருக்கும் இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. வெள்ளந்தியான கிராமத்து கதாபாத்திரத்தில் கார்த்தி, டிப் டாப்பாக நகரத்திலிருந்து கிராமம் செல்லும் கதாபாத்திரத்தில் அரவிந்த் சுவாமி என இருவருக்கிடையே நடக்கும் அன்பு முரண்கள் வழியாக கிராமத்து வாழ்க்கையை கண்முன் கொண்டுவருவதாக இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டையொட்டி நேற்று இரவு சென்னையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் ‘மெய்யழகன்’ படம் குறித்து பேசியிருக்கும் இயக்குநர் பிரேம் குமார், ” ’96’ படம் வெளியாகி ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கிறேன். இந்தப் படத்தின் படப்பிடிப்பைக் கடந்த ஆண்டு நவம்பர் 17ம் தேதி ஆரம்பித்தோம், செப்டம்பர் 27ம் தேதி படம் திரைக்கு வருகிறது. ஒரு ஆண்டுக்குள்ளேயே படத்தை எடுத்து முடித்துவிட்டோம் என்பதே மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்தக் காலத்தில் வெறுப்புகளும், எதிர்மறை சிந்தனைகளும் எல்லோரிடமும் அதிகரித்துவிட்டது. அதை அவ்வளவு எளிதில் மனதிலிருந்து மாற்றிவிட முடியாது. வேறு எதாவது நல்ல எண்ணங்கள் மனதில் நிறைந்தால்தான், கெட்ட எண்ணங்களெல்லாம் வெளியேப்போகும். அன்புதான் எல்லா நெகட்டிவிட்டியையும் பாஸிட்டிவாக மாற்றும் ஆற்றல் கொண்டது. அந்த அன்பைப் பற்றித்தான் இந்த ‘மெய்யழகன்’ திரைப்படம் பேசுகிறது.
இந்தப் படத்தைப் பார்த்தால் உங்கள் ஊருக்குப் போகத் தோன்றும், உங்க உறவுகளைப் பார்க்கத் தோன்றும், சிலரிடம் மன்னிப்புக் கேட்கத் தோன்றும். அதனால், வரும் செப்டம்பர் 27ம் தேதி எல்லோரும் நிச்சயமாக ‘மெய்யழகன்’ படத்தைப் பாருங்கள்” என்று பேசியிருக்கிறார் இயக்குநர் பிரேம் குமார்.