காந்திநகர்: இன்றைய இந்தியா இன்றைக்கு மட்டும் அல்ல, அடுத்த 1000 ஆண்டுகளுக்கு அடித்தளமிடுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்ற 4-வது உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, “60 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மக்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒரே அரசாங்கத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். மூன்றாவது முறையாக எங்கள் ஆட்சி தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பின்னால், இந்திய மக்களின் மிகப்பெரிய விருப்பங்கள் உள்ளன.
இன்று, 140 கோடி இந்தியர்களுக்கும் நம்பிக்கை உள்ளது, இந்தியாவின் இளைஞர்களுக்கு நம்பிக்கை உள்ளது, இந்தியாவின் பெண்களுக்கு நம்பிக்கை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் சிறகுகளைப் பெற்ற அவர்களின் விருப்பங்கள், இந்த மூன்றாவது தவணையில் பறக்கும் என்ற நம்பிக்கை அது. நமது இந்த 3-வது பதவிக்காலம், கண்ணியமான வாழ்க்கை வாழ்வதற்கான உத்தரவாதமாக இருக்கும் என்று நாட்டில் உள்ள ஏழைகள், தலித்துகள், ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் நம்புகிறார்கள்.
இந்தியாவை விரைவாக முதல் 3 பொருளாதாரங்களுக்குள் கொண்டு செல்வதற்கான உறுதியுடன் 140 கோடி இந்தியர்களும் செயல்பட்டு வருகின்றனர். இந்தியாவின் விரைவான வளர்ச்சிக்கு, ஒவ்வொரு துறைகளிலும் எடுக்கப்பட வேண்டிய முடிவுகளை நாங்கள் எடுத்திருக்கிறோம். எங்களது மூன்றாவது பதவிக்காலம் தலித்துகள், ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிரிவினரின் கண்ணியமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும்.
இன்றைய நிகழ்வு தனியான ஒரு நிகழ்வு அல்ல, மாறாக ஒரு பெரிய பணியின் ஒரு பகுதியாகும். 3வது முறையாக நாங்கள் தெர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இந்த 100 நாட்களில், உள்கட்டமைப்பு விரிவாக்கத்திற்காக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் 7 கோடி வீடுகளை கட்டி வருகிறோம். கடந்த 2 ஆட்சியில் 4 கோடி வீடுகளை கட்டி கொடுத்துள்ளோம். மூன்றாவது ஆட்சியில் 3 கோடி புதிய வீடுகள் கட்டும் பணியையும் எங்கள் அரசு தொடங்கியுள்ளது. இந்தியாவின் பன்முகத்தன்மை, இந்தியாவின் அளவு, இந்தியாவின் திறன், இந்தியாவின் செயல்திறன் இவை அனைத்தும் தனித்துவமானது. எனவே, உலகிற்கு இந்திய தீர்வுகள் ஏற்றதாக இருக்கும்.
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 4வது உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் மாநாடு, 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான எங்கள் விரிவான திட்டத்தில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது.
இந்தியாவில் நடத்தப்பட்ட உலக செமிகண்டக்டர் உச்சிமாநாட்டிற்கு உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் மக்கள் வந்தனர். இப்போது பசுமை ஆற்றலின் எதிர்காலத்தைப் பற்றி விவாதிக்க நாம் இங்கு கூடியுள்ளோம். உலகிற்கு வழி காட்ட எண்ணற்ற நடவடிக்கைகளை பொறுப்புடன் எடுத்துள்ளோம்.
இன்றைய இந்தியா இன்றைக்கு மட்டும் அல்ல, அடுத்த 1000 ஆண்டுகளுக்கு அடித்தளமிடுகிறது. எங்களின் குறிக்கோள் உச்சத்தை அடைவது மட்டுமல்ல, உச்சத்தில் நிலைநிறுத்துவதே!
G20 நாடுகளில், பாரிஸ் காலநிலை வாக்குறுதிகளை காலக்கெடுவிற்கு 9 ஆண்டுகளுக்கு முன்பே அடைந்த முதல் நாடு இந்தியா. ஜி20 நாடுகளில் நாம் மட்டும்தான் இந்த சாதனையை படைத்துள்ளோம். வளர்ந்த நாடுகளால் செய்ய முடியாததை, வளரும் நாடு சாதித்து விட்டது.
தற்போது இந்தியாவில் மக்கள் தங்கள் அன்னையின் பெயரில் மரங்களை நடுகிறார்கள். உங்கள் அனைவரையும் இந்தப் பிரச்சாரத்தில் கலந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன். இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதை நிறைவேற்ற அரசு புதிய கொள்கைகளை உருவாக்கி அனைத்து வகையிலும் ஆதரவு அளித்து வருகிறது.
இந்தியாவின் முயற்சி முழுக்க முழுக்க மேட் இன் இந்தியா தீர்வை நோக்கியே உள்ளது. இதன் காரணமாக, உங்களுக்காக இங்கு பல வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. பசுமை மாற்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றுகிறோம்” என தெரிவித்தார்.