புதுடெல்லி: மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக மத்திய அரசு வட்டாரம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதன்படி, 2021-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு, கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம்தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அப்போது கரோனா பெருந்தொற்று பரவியதால் தள்ளி வைக்கப்பட்டது. கரோனாவில் இருந்து மீண்ட பிறகு மக்களவைத் தேர்தல் நடைமுறைகள் தொடங்கியதால் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி மேலும் தாமதமானது.
இதனிடையே, மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரு கின்றன. கடைசியாக கடந்த 1931-ம் ஆண்டு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது நிறுத்தப்பட்டது.
இதனிடையே, நாடாளுமன்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட மசோதா கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது. எனினும், மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்த பிறகுதான் இந்த சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு கூறியிருந்தது. இந்நிலையில், மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் நேற்று முன்தினம் கூறும்போது, “மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான அடிப்படை பணிகள் தொடங்கி உள்ளன. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். அதேநேரம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
ஒரே நாடு ஒரே தேர்தல்: மேலும் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான வழிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி இந்த ஆட்சி காலத்திலேயே ஒரே நாடு,ஒரே தேர்தல் திட்டம் நிச்சயம் அமல்படுத்தப்படும்” என்றார்.
பிரதமர் வலியுறுத்தல்: கடந்த மாதம் சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, அவ்வப்போது தேர்தல் நடைபெறுவதால் நாட்டின்வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுவதால் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.