Mohammed Shami Fitness Update: இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக இருந்து வரும் முகமது ஷமி, அவரது தற்போதைய உடல் தகுதி குறித்து முக்கிய அப்டேட்டை வழங்கியுள்ளார். மீண்டும் கிரிக்கெட் விளையாட கடினமாக உழைத்து வருவதாகவும், அதனால் முழு உடல் தகுதி இல்லாமல் விளையாடி மீண்டும் காயமடைய விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை பிறகு எந்தவித கிரிக்கெட் போட்டியிலும் முகமது ஷமி விளையாட வில்லை. கணுக்கால் காயத்தால் அவதிப்பட்டு வந்த முகமது ஷமி அறுவை சிகிச்சை செய்து கொண்டார். தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மறுவாழ்வில் உள்ளார். அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் இருந்து வந்த முகமது ஷமி கடந்த ஜூலை மாதம் முதல் மீண்டும் வந்து வீச்சு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
சமீபத்தில் நடைபெற்ற பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் ஆண்டு விருது வழங்கும் விழாவில் முகமது ஷமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அங்கு பேசிய அவர் மீண்டும் பழைய உடற்தகுதியை பெற கடுமையாக உழைத்து வருவதாகவும், அதில் எந்தவித கஷ்டத்தையும் நினைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். “நான் விரைவாக குணமடைய கடினமாக உழைத்து வருகிறேன். கிரிக்கெட் விளையாடி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது, எனவே நான் மீண்டும் அணிக்குள் வரும்போது எந்தவித காயமும் ஏற்படக்கூடாது. நான் எனது முழு உடல் தகுதியுடன் இருக்க வேண்டும், அதனால் எந்தவித அசவுகரியத்தையும் நினைக்கவில்லை. நான் எவ்வளவு வலிமையாக அணிக்குள் வருகிறேனோ, அது எனக்கு நல்லது. அதனால் அவசரப்பட்டு எந்த ஒரு தொடரிலும் எனது பெயரை கொடுக்க விரும்பவில்லை.
அது பங்களாதேஷ், நியூசிலாந்து ஆஸ்திரேலியா, என்ன எந்த அணியாக இருந்தாலும் சரி நான் அவசரப்பட்டு மீண்டும் காயமடைய விரும்பவில்லை. கடந்த சில மாதங்களாக வலையில் வந்து வீசி வருகிறேன், நான் எனது 100% உடல் தகுதியை மீண்டும் பெரும் வரை எந்தவித போட்டிகளிலும் இடம்பெறமாட்டேன். நான் முழுவதும் குணமான பிறகு எனது உடற்பயிற்சியை நிரூபிக்க உள்நாட்டில் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்றால் நான் நிச்சயம் விளையாடுவேன். நிறைய எதிர்ப்புகளை சந்தித்துள்ளேன், எனது 100 சதவீதத்தை அணிக்கு கொடுக்க எல்லாவற்றையும் செய்ய தயாராக இருக்கிறேன்” என்று முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இரண்டாவது கட்டத்தில் ஷமி மீண்டும் அணிக்குள் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷமி கடந்த சில வருடங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வருகிறது. 24.61 சராசரியில் 85 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி சக்தி வாய்ந்த வேகப்பந்து வீச்சாளராக உள்ளார். தற்போது WTC தரவரிசையில் இந்தியா 68.52 புள்ளிகளுடன் முன்னணியில் உள்ளது. அடுத்ததாக பங்களாதேஷ், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளார். பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 19-ம் தேதி சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் செப்டம்பர் 27 ஆம் தேதி கான்பூரில் தொடங்குகிறது.