ராமநாதபுரம்: “மது ஒழிக்கப்பட வேண்டும் என்றால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திமுகவினர் நடத்தும் மது ஆலைகள் முன்பு தர்ணா செய்திருக்க வேண்டும்” என பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம் தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் இன்று (செப்.16) பாஜக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்டச் செயலாளர் சீனியின் உறவினர் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணம் முடிந்த கையோடு, புது மண தம்பதியரான தர்மமுனீஸ்வரன் – ரம்யா ஆகியோர் மிஸ்டு கால் மூலம் மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம், ராமநாதபுரம் மாவட்ட தலைவர் தரணி முருகேசன் முன்னிலையில் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர். அதன்பின் மணமக்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.
பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நாடு முழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ராமநாதபுரத்தில் மணமக்கள் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்ட சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. தமிழகத்தில் பலதரப்பட்ட மக்களும் பாஜகவில் இணைந்து வருகின்றனர். ட்விட்டரில் ஒரு பதிவு போட்டதற்கே, மிரட்டல் விடப்பட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பம் அகற்றப்பட்டது. அதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் முதல்வரை சந்தித்து மன்னிப்புக் கேட்டுள்ளார்.
அவர் எப்படி ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க முடியும்? வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுகவிடம் அதிகமான சீட்டுகளை பெறுவதற்காகவே இதுபோன்ற மது ஒழிப்பு நாடகத்தை நடத்தி வருகிறார். உண்மையிலேயே மது ஒழிக்கப்பட வேண்டும் என்றால் அவர் திமுகவினர் நடத்தும் மது ஆலைகள் முன்பு தர்ணா செய்திருக்க வேண்டும். திமுக ஆட்சியில் பட்டியலின மக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். பட்டியலின மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் அவர் திமுக கூட்டணியை விட்டு வெளியேறி பாஜக கூட்டணியில் இணைய வேண்டும்.
2014-ம் ஆண்டிலிருந்து ராமேசுவரம் மீனவர்கள் பாதுகாப்புடன் உள்ளனர். இலங்கை அரசு ராமேசுவரம் மீனவர்களை மொட்டை அடித்து அனுப்பியது வருத்தமளிக்கக் கூடியது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.