நாக்பூர்: ‘‘மக்களவை தேர்தலில் பிரதமர்வேட்பாளராக என்னை நிறுத்துவதற்கு எதிர்க்கட்சி கூட்டணியின் மூத்த தலைவர் முன்வந்தபோதும், நான் அதை ஏற்காமல் மறுத்துவிட்டேன்’’ என மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில்இதழியல் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது: நான் எனது நம்பிக்கை, மற்றும் கட்சி மீது மிகுந்த விசுவாசத்துடன் உள்ளேன். மக்களவை தேர்தலுக்கு முன்பாக, என்னை பிரதமர் வேட்பாளராக ஆதரிப்பதற்கு, எதிர்க்கட்சி கூட்டணியின் மூத்த தலைவர் முன்வந்தார். அவரிடம் நீங்கள் ஏன்எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும்? நான் அதை ஏன் ஏற்க வேண்டும் என்று கேட்டேன். பிரதமராவது எனது நோக்கம் அல்ல. இந்திய ஜனநாயகத்தில் தனிநபரின் நம்பிக்கை மிக முக்கியமானது.
அதனால் பத்திரிகையாளர்கள் மிக உயர்ந்த நம்பிக்கையுடன் இருக்க வேண்டும், அந்த உறுதியை எதிர்கால தலைமுறையினருக்கும் கொண்டு செல்ல வேண்டும். பத்திரிகையாளர்கள் கடுமையாக உழைத்தாலும், அவர்களுக்கு நிதி ஆதரவு கிடைப்பதில்லை. நாட்டில் வலுவான சாலைப் போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த மத்திய அரசு தொடர்ந்து கவனம் செலுத்துகிறது. நெடுஞ்சாலை திட்டங்களுக்கு இந்தாண்டு அரசு ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிகமாக நிதி ஒதுக்க உள்ளது.
சமீபத்தில் ரூ.50,655 கோடி மதிப்பில் 936 கி.மீ தூரத்துக்கு 8 விரைவுசாலை திட்டங்களுக்கு மத்திய அரசுஅனுமதி வழங்கியது. ரூ.60,000 கோடி மதிப்பில் 4 பெரிய திட்டங்கள்அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வைக்கப்படவுள்ளன. இதில் ரூ.20,000 கோடி மதிப்பிலான சூரத்- சோலாபூர் வழித்தடம், ரூ.25,000கொடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் ஷில்லாங் – சில்சார் வழித்தடங்களும் அடங்கும். இவ்வாறு அமைச்சர் நிதின்கட்கரி கூறினார்.