பெய்ஜிங்,
கிழக்கு சீனாவின் கடற்கரை பகுதியில் இருந்து சில கிலோ மீட்டர்கள் தொலைவில் ‘பெபின்கா’ சூறாவளி மையம் கொண்டுள்ளது. இந்த சூறாவளி இன்று இரவு சுமார் 151 கி.மீ. வேகத்தில் கரையை கடக்கும் என சீன வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கிழக்கு கரையோர பகுதிகளில் 254 மி.மீ. அளவிலான மழைப்பொழிவு பதிவாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஷாங்காய் நகரில் இருந்து சுமார் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, மோசமான வானிலை காரணமாக ஷாங்காய் நகரில் உள்ள விமான நிலையங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சூறாவளி கரையை கடக்கும் வரை சுமார் 600 விமானங்கள் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வானிலை சீரான பிறகு விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.