பணம், பைக் வரதட்சணையாக கொடுக்காததால் ஆத்திரம் – மனைவியை அடித்துக்கொன்ற தொழிலாளி

லக்னோ,

உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா பகுதியில் உள்ள பைகேடா கிராமத்தைச் சேர்ந்த சுந்தர். தொழிலாளியான இவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மீனா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது வரதட்சணையாக ரூ.3 லட்சம் பணம், அப்பாச்சி பைக் ஆகியவை தர வேண்டும் என்று மணமகன் வீட்டார் கேட்டுள்ளனர். ஆனால் மீனாவின் குடும்பத்தினரால் இந்த வரதட்சணையை கொடுக்க முடியவில்லை.

வரதட்சணை தொடர்பாக கணவன் தொடர்ந்து சண்டையிட்டு வந்ததால் கோவத்தில் மீனா, தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் மாமனார் வீட்டிற்கு அடிக்கடி வந்த சுந்தர், மனைவியை சமாதானப்படுத்த முயன்றுள்ளார். இறுதியாக மீனா சமாதானம் ஆனதால் நேற்று இரவு தனது கணவர் வீட்டிற்கு வந்துள்ளார். வந்த இடத்தில் மீண்டும் வரதட்சணை தொடர்பாக மனைவியிடம் சுந்தர் சண்டையிட்டுள்ளார்.

அப்போது ஆத்திரமடைந்த சுந்தர், மனைவியின் தலையை கட்டையால் தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதனையடுத்து சுந்தர் அங்கிருந்து ஓடிப்போய் தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து, குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சுந்தரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையில், மீனாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.