“முத்ரா திட்டம் மூலம் கோவையில் 20 லட்சம் பேரும், ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டில் 5.6 கோடி பேரும் பயனடைந்துள்ளனர்.” என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதுதான் தற்போதைய ஹாட் டாப்பிக்.
கடந்த புதன்கிழமை, கோவை கொடிசியா அரங்கில் நடந்த தொழில் முனைவோர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது, “இதுவரை முத்ரா திட்டத்தின் கீழ், இந்தியாவில் 49.55 கோடி பேர் கடன் பெற்றுள்ளனர். இதில் தமிழ்நாட்டில் மட்டும் 5.6 கோடி பேரும், கோவையில் 20 லட்சம் பேரும் கடன் பெற்றுள்ளனர்.” என்று கூறியுள்ளார்.
இதில் என்ன பரபரப்பு?
நிர்மலா சீதாராமன் பேச்சு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார். அவர், “தமிழ்நாட்டு மக்களின் மொத்த எண்ணிக்கையே 8 கோடிதான். அதில் 5.6 கோடி பேரும், கோவையின் 35 லட்ச மக்கள் தொகையில் 20 லட்சம் பேரும் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெற்றிருக்கிறார்கள் என்று நிதியமைச்சர் கூறுவதை நம்ப முடியவில்லை. 2023-24-ல் வழங்கப்பட்டுள்ள முத்ரா திட்டத் தகவல்கள் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.” என்று பேசியுள்ளார்.
8 கோடி பேர் கொண்ட மக்கள் தொகையில் 5.6 கோடி பேர் கடன் வாங்கியிருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியும், ஆச்சரியமும் கலந்த தகவல்தான்.
முத்ரா திட்டம் என்றால்…
முத்ரா திட்டம் என்றால் எந்தவொரு உத்தரவாதமும் இல்லாமல் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம் ஆகும். இந்தத் திட்டம் குறு, சிறு தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக 2015-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டதாகும். முத்ரா திட்டத்தில் 18 – 65 வயதிற்குள் இருப்பவர்கள்தான் விண்ணப்பிக்க முடியும்.
இந்தத் திட்டத்தின் கீழ், வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் கடன் வழங்கி வருகின்றனர். இந்தத் திட்டத்தின் கீழ், தையல் தொழில், பெட்டிக் கடை, அழகு நிலையம், காய்கறி வியாபாரம் போன்ற தொழில் செய்யும் குறு, சிறு தொழில்முனைவோர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
புள்ளி விவரம் என்ன சொல்கிறது?
கடந்த 6-ம் தேதி வெளியான புள்ளி விவரத்தின்படி, இந்தியாவில் இதுவரை முத்ரா திட்டத்தின் கீழ் 49.55 கோடி பேர் 30 லட்ச கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 5.6 கோடி பேர் 3.03 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர்.
முத்ரா திட்டத்தில் அதிகம் கடன் பெற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அடுத்தடுத்து இடங்களைப் பீகார், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் பிடித்துள்ளன. அநேகமாக, இந்தப் புள்ளி விவரத்தை வைத்துத்தான் மத்திய நிதியமைச்சர் கோவையில் பேசியுள்ளார்.
முத்ரா வலைத்தளப் பக்கத்தின்படி, 2023-24 நிதியாண்டில் மொத்தமாக இந்தியாவில் 6.67 கோடி பேருக்கு 5.32 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
மக்கள்தொகை விவரம்…
இந்திய சென்சஸ் விவரப்படி, தமிழ்நாட்டில் 2024-ம் ஆண்டில் மக்கள் தொகை 7.71 கோடியாக இருக்கும். அந்த விவரப்படியே கிட்டதட்ட 60 லட்சம் பேர் 18 வயதிற்குக் கீழும், 70 லட்சம் பேர் 60 வயதிற்கு மேல் உள்ளவர்களாகவும் இருப்பார்கள். ஆகவே, கிட்டதட்ட 1.30 கோடி பேர் இந்த மக்கள் தொகையில் முத்ரா திட்டத்தில் மூலம் கடன் பெற முடியாது. இப்போது மக்கள் தொகையில் முத்ரா கடன் பெறத் தகுதி உள்ளவர்கள் 6.41 கோடி பேராக இருப்பார்கள்.
இதிலும் கல்லூரி படிப்பவர்கள், வேலைவாய்ப்புக்காகக் காத்திருப்பவர்கள், ஏற்கனவே வேலையில் இருப்பவர்கள், தொழிலதிபர்கள், வெளிநாட்டில் வேலை செய்பவர்கள், இல்லத்தரசிகளைத் தவிர, மீதம் உள்ளவர்களை எடுத்துக் கொண்டாலும் நிச்சயம் அனைவராலும் முத்ரா கடனை வாங்கியிருக்க முடியாது.
அதனால், கடந்த 6-ம் தேதி வெளியான புள்ளி விவரமும், நிதி அமைச்சரின் பேச்சும் தெளிவாகப் புரிய வேண்டுமானால், அதற்குச் சரியான விளக்கமும் அறிக்கையும் வெளியிட வேண்டும். காத்திருப்போம்?!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…