அடுத்த அதிரடி பாய்ச்சலுக்கு தயாராகிவிட்டார் லெஜண்ட் சரவணன்.
ஜேடி ஜெர்ரியின் இயக்கத்தில் ‘தி லெஜண்ட்’ படத்தின் மூலம் ஹீரோவானவர், தற்போது ‘கருடன்’ துரை செந்தில்குமாரின் இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கான பூஜை நேற்று நடந்திருக்கிறது.

‘தி லெஜண்ட்’ படத்தில் ஊர்வசி ரவுடேலா, பிரபு, மறைந்த நடிகர் விவேக், யோகி பாபு, சுமன், சிங்கம்புலி எனப் பலரும் நடித்திருந்தார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இந்த படத்தைத் தொடர்ந்து சரவணா அடுத்து நடிக்கும் படத்திற்கான கதைகளைக் கேட்க ஆரம்பித்தார். இயக்குநர்கள் பலரும் அவரிடம் கதைகள் சொல்லி வந்தனர். இந்நிலையில்தான் ‘கருடன்’ துரை.செந்தில்குமாரின் கதை பிடித்துவிட, உடனடியாக வேலைகளைத் தொடங்கிவிட்டார் ஹீரோ.

கடந்த ஜூன் மாதத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தின் பூஜை சென்னையில் நடந்தது. அதனைத் தொடந்து தூத்துக்குடியில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இப்படத்தில் வில்லனாக ஷாம் நடிக்கிறார். தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்த ‘ஆர்.எக்ஸ்.100’ படத்தில் நடித்தவர் பாயல் ராஜ்புத். இப்போது பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். பாயல் தவிர, ஆண்ட்ரியா, ‘பாகுபலி’ பிரபாகர், சந்தோஷ் பிரதாப் என பலரும் நடிக்கின்றனர். முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து சில வாரங்கள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு தூத்துக்குடி சென்றனர். ஷாம், ஆண்ட்ரியா எனப் பலரும் இந்த ஷெட்யூலில் உள்ளனர் என்கிறார்கள்.

தூத்துக்குடி லெஜண்ட் சரவணாவின் சொந்த ஊர் என்பதால், அவரது சுற்றுவட்டார பகுதிகளில் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. ‘கருடன்’ தேனிப் பகுதியை மையமாக வைத்து உருவானது போல, இந்தப் படம் தூத்துக்குடி வட்டார கதையை பேசவிருக்கிறது. இது ஒரு பரபரப்பான ஆக்ஷன் த்ரில்லர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.
தூத்துக்குடி ஷெட்யூலை தொடர்ந்து ஜார்ஜியா, மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு வருகின்றனர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…