மலையாள சினிமாவில் மம்மூட்டி, மோகன்லாலுக்குப் பிறகு யார் சிறந்த நடிகர் என்ற கேள்விக்கு நடிகை ஊர்வசி கூறிய பதில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஊர்வசி நடிப்பில் சமீபத்தில் ‘உள்ளொழுக்கு’ திரைப்படம் வெளியானது. இரு பெண் கதாபாத்திரங்களுக்கு இடையேயான உணர்வுகளை அழுத்தமாகப் பேசியது இந்த மலையாளப் படைப்பு. இதைத் தவிரத் தமிழிலும் அவ்வப்போது ஆழமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் இவரிடம் மம்மூட்டி, மோகன்லாலுக்குப் பிறகு யார் சிறந்த நடிகர் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், “கடின உழைப்பாலும் அர்ப்பணிப்பாலும் அவரவர் கரியரிலும் உச்சத்தை மம்மூட்டியும் மோகன்லாலும் தொட்டுவிட்டார்கள். சமீபத்திய நிகழ்வுகளின்படி பார்த்தால் சிறந்த நடிகர் பகத் பாசில்தான் எனக் கூறிவிடுவார்கள். சந்தேகமே இல்லை… கூடிய விரைவில் இந்தியா முழுவதும் அறியப்படும் சிறந்த நடிகராக உருவெடுப்பார். அவரிடம் எந்தக் கதாபாத்திரத்தைக் கொடுத்தாலும் அதைச் சரியாகச் செய்துவிடும் சாமர்த்தியம் இருக்கிறது. அவர் கதாபாத்திரத்தைத் தேர்வு செய்யும் விதமும் தனித்துவமாக இருக்கிறது. ஏற்கெனவே நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்திலிருந்தும் வேறுபட்ட வகையில் அடுத்த கதாபாத்திரத்தைத் தேர்வு செய்கிறார். முக்கியமாக 22 ஃபீமேல் கோட்டயம், சப்பக் குரிஷு மாதிரியான திரைப்படங்களில் நெகடிவ் கதாபாத்திரங்களும் செய்திருக்கிறார்.
தான் ஒரு ஹீரோவாக இருக்க வேண்டும் என்பதை ஃபகத் எண்ணத்தில் கொள்ளவில்லை. தான் ஒரு நடிகராக இருக்க வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறார். கமல் ஹாசன் நடிக்கும் படத்தில் மற்ற கதாபாத்திரங்கள் கவனிக்கப்படுவது சின்ன விஷயமல்ல. இருப்பினும் சில காட்சிகளில் நாம் ஃபகத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். இவரைத் தாண்டி ப்ரித்விராஜ் தன்னை ஆழமாக நிரூபித்துவிட்டார். அவர் ஒரு சிறந்த இயக்குநரும்கூட. பேசில் ஜோசப்பும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார். மம்மூட்டி மோகன் லாலுக்குப் பிறகு வந்த பல நடிகர்களும் தங்களுடைய பாதையில் வேறுபட்டு தனித்துவமாகத் திகழ்கிறார்கள்.” என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…