புதுடெல்லி: டெல்லி முதல்வர் பதவியை அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று ராஜினாமா செய்தார். இதையடுத்து, ஆம் ஆத்மியின் சட்டப்பேரவை கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வித் துறை அமைச்சர் ஆதிஷி மர்லேனா சிங் புதிய முதல்வராக பதவியேற்க உள்ளார். துணைநிலை ஆளுநரை சந்தித்து, அவர் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி திஹார் சிறையில் இருந்த முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த 13-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். கடந்த 15-ம் தேதி ஆம் ஆத்மி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், ‘‘முதல்வர் பதவியை அடுத்த 2 நாட்களில் ராஜினாமா செய்வேன். புதிய முதல்வரை ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தேர்வு செய்வார்கள். அடுத்த சட்டப்பேரவை தேர்தல் வரை பதவியில் அமரமாட்டேன். வரும் தேர்தலில் மக்கள் எனக்கு ஆதரவாக வாக்களித்து வெற்றி பெற்ற பிறகே மீண்டும் முதல்வர் பதவியில் அமர்வேன்’’ என்றார்.
புதிய முதல்வரை தேர்வு செய்ய, டெல்லியில் ஆம் ஆத்மியின் அரசியல் விவகார குழு கடந்த 16-ம் தேதி ஆலோசனை நடத்தியது. கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் கேஜ்ரிவால் கருத்துகளை கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டம் டெல்லியில் நேற்று காலை நடைபெற்றது. இதில், மாநில கல்வித்துறை அமைச்சர் ஆதிஷி மர்லேனா சிங் பெயரை கேஜ்ரிவால் முன்மொழிந்தார். இதற்கு அனைத்து எம்எல்ஏக்களும் ஆதரவுதெரிவித்தனர். இதையடுத்து, ஆம் ஆத்மியின் சட்டப்பேரவை கட்சி தலைவராக ஆதிஷிதேர்வு செய்யப்பட்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் ஆதிஷி கூறியதாவது: எனது அரசியல் குரு கேஜ்ரிவாலுக்கு நன்றி. அவர் எனக்கு மிகப்பெரிய பொறுப்பைஅளித்துள்ளார். டெல்லி மக்களின் அன்பை பெற்ற அண்ணன் கேஜ்ரிவால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார். அதனால், எனக்கும், டெல்லி மக்களுக்கும் இது துயரமான நேரம்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு, கடந்த 2 ஆண்டுகளாக கேஜ்ரிவாலுக்கு எதிராக காய் நகர்த்தி வருகிறது. சிபிஐ, அமலாக்கத் துறை மூலம் அவர் மீது பொய் வழக்குகளை பதிவு செய்துள்ளது. ஊழல்குற்றச்சாட்டுகளை சுமத்தி, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.வரும் சட்டப்பேரவை தேர்தலில் மக்கள்நீதிமன்றத்தில் முறையிடுவோம். தேர்தலுக்கு பிறகு கேஜ்ரிவால் மீண்டும் முதல்வராக பதவியேற்பார். தற்போது அவர் ராஜினாமா செய்தாலும், டெல்லி மக்களை பொருத்தவரை அவரே முதல்வர். தியாகத்தின் உதாரணமாக அவர் திகழ்கிறார். இவ்வாறு ஆதிஷி கூறினார்.
டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் நவம்பரில் தேர்தல் நடத்த ஆம் ஆத்மிஎம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி மூத்த தலைவர் கோபால் ராய் தெரிவித்தார். இந்நிலையில், டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவை அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று மாலை சந்தித்து, ராஜினாமா கடிதத்தை அளித்தார். இதை ஆளுநர்ஏற்றுக் கொண்டார். கேஜ்ரிவாலுடன் சென்றஆதிஷி, எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார். புதிய அரசு பதவியேற்பு விழா தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.