கம்பஹா மாவட்டம் 2024 ஜனாதிபதி தேர்தலுக்குத் தயார்

 
கம்பஹா மாவட்டத்தில் 18 இலட்சத்து 81ஆயிரத்து 129 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்,  1,212 வாக்களிப்பு மத்திய நிலையங்கள் ஆகியவற்றுடன்  2024 ஜனாதிபதி தேர்தலுக்கான  சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட செயலாளருமான  வலிந்த கமகே தெரிவித்தார்.
 
ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக நேற்று (16) இடம்பெற்ற ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடலின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
 
வாக்குகளை எண்ணும் பணிகளுக்காக வெயங்கொட, பத்தல கெதர சியன கல்விக் கல்லூரி உட்பட 4 வளாகங்களில் 150 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட தெரிவத்தாட்சி அலுவலர், வத்தலகெதர சியன கல்விக் கல்லூரியில் 2 வளாகங்களிலும், வித்யாலோக வித்தியாலயம் மற்றும் நிட்டம்புவ சங்கபோதி வித்தியாலயம் ஆகிய வளாகங்களிலும் தேர்தல் கடமைகளுக்காக 20,000 அரசாங்க உத்தியோகத்தர்கள் வரை ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.
 
எதிர்வரும் 21ஆம் திகதி சகல வாக்களிப்பு நிலைய செயற்பாடுகளை மிகவும் நன்றாக மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாகவும், நியாயமான மற்றும் நேர்மையான தேர்தலை நடாத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவத்தாட்சி அலுவலர் இதன் போது சுட்டிக்காட்டினார்.
 
தேர்தலுக்கு முன்னரும் பின்னருமான சகல பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் அவசியமான ஏற்பாடுகள் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட தெரிவித்தாட்சி அலுவலர் லலிந்த கமகே, தேர்தல் தினத்தன்று மழையுடனான காலநிலை காணப்பட்டு ஏதேனும் அனர்த்தம்  ஏற்படுமாயின் அதற்கு முகம் கொடுப்பதற்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு மற்றும் முப்படையினர் தயாராக இருப்பதாகவும் மாவட்ட செயலாளர் லலிந்த கமகே குறிப்பிட்டார்.
 
 கடந்த காலங்களில் தேர்தல்கள் தொடர்பாக பதாதைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துதல் போன்ற சிறிய 150 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாகவும், பாரிய முரண்பாடுகள் எதுவும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை என்றும் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும்போது தெரிவத்தாட்சி அலுவலர்  விபரித்தார்.
 
 இந்தத் தேர்தல் காலத்தில் கம்பஹா மாவட்டத்தில் விசேட பாதுகாப்பு வேலைத்fதிட்டம் செயற்படுத்தப்படுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் வலியுறுத்தினார். 
 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.