தி.மு.க-வின் பவள விழா மற்றும் முப்பெரும் விழா சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியில், கலைஞர் கருணாநிதி AI தொழில்நுட்பம் மூலம் தோன்றி வாழ்த்து தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, இந்தாண்டுக்கான பெரியார், அண்ணா, பாவேந்தர், கலைஞர், பேராசிரியர் மற்றும் ஸ்டாலின் விருதுகளுக்கு தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கினார்.
அதையடுத்து, தலைமையுரையாற்றிய துரைமுருகன், தி.மு.க தனது வீரியத்தைக் காட்டவேண்டிய காலகட்டம் வந்துவிட்டதாகவும், அதற்காக இளைஞர் பட்டாளங்களை உதயநிதி திரட்டிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
அவரைத்தொடர்ந்து உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், “வெள்ளி விழா மற்றும் பொன்விழாவின் போது தி.மு.க ஆட்சியில் இருந்தது. தற்போது பவள விழாவின் போது தி.மு.க ஆட்சியில் இருக்கிறது. அடுத்து நூற்றாண்டு விழாவிலும் தி.மு.க ஆட்சியில் இருக்கும். தி.மு.க-வின் தேவை இன்னும் நூறு ஆண்டுகளுக்கு இருக்கிறது. எந்தவொரு மாநிலமும் செய்யாத அளவுக்கு, ஏரளமான நெருக்கடிக்கு மத்தியில் தமிழகத்தை வளமிக்க மாநிலமாக தி.மு.க அரசு மேம்படுத்தியிருக்கிறது.
இன்றைக்கு, கிரீம் பன்னுக்கு எவ்வளவு வரி போட்றீங்கனு கேட்கக்கூட முடியாத நிலை இருக்கிறது. இனிவரும் தேர்தல்களில் நாம்தான் வெற்றிபெறுவோம். இதை ஆணவத்தில் கூறவில்லை. 2026-ல் வரலாறு படைக்கத் தயார்” என்று கூறி உரையை நிறைவுசெய்தார்.