“கிரீம் பன் வரிக்கு கூட கேள்வி எழுப்ப உரிமை இல்லாத நிலை!” – திமுக பவள விழாவில் ஸ்டாலின் ஆதங்கம்

சென்னை: “இன்றைக்கு கிரீம் பன்னுக்கு ஏன் இவ்வளவு வரி போடுகிறீர்கள் என்று கேட்கக் கூட உரிமையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், மாநில சுயாட்சியை வென்றெடுப்பதற்கான ஓர் அறிவிப்புதான், இந்த பவள விழா செய்தியாக நான் சொல்ல விரும்புகிறேன். இந்தியாவில் மாநில சுயாட்சி, மாநில சுயாட்சிக் கொள்கைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஒரே இயக்கம் திமுக மட்டும்தான்” என்று சென்னையில் நடந்த திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியது: “14 நாட்கள் அமெரிக்கப் பயணத்தை முடித்துவிட்டு, கடந்த 14-ம் தேதி சென்னைக்குத் திரும்பினேன். தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, நானும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவும் அமெரிக்காவுக்குச் சென்றோம். சென்றோம் என்பதைவிட வென்றோம் என்றுத்தான் சொல்ல வேண்டும். பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கான முதலீடுகளும், பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளும் கிடைக்கவுள்ளது. அதை எண்ணி நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எனக்கு அளவே கிடையாது. அதேபோல், எனக்கு அமெரிக்கவாழ் தமிழர்கள் கொடுத்த வரவேற்பு என்பது, இந்தியாவின் மற்ற மாநில மக்களும் சமூக ஊடகங்களில் வியந்து பேசுகிற அளவுக்கு சென்றடைந்தது.

அதற்கு காரணம், நாம் என்றைக்கும் மக்களோடு மக்களாக இருக்கிறோம். 1966-ம் ஆண்டு என்னுடைய 13 வயதில், கோபாலபுரம் இளைஞர் திமுகவை தொடங்கி, 53 ஆண்டு காலம் இயக்கத்துக்கும், தமிழகத்துக்கும் உழைத்த உழைப்புக்கான அங்கீகாரம்தான் இன்று பவள விழா காணக்கூடிய திமுகவுக்கு நான் தலைவராக இருப்பது. கருப்பு சிவப்பு கொடியும் உடன்பிறப்புகளின் அரவணைப்பும், தலைவர் கருணாநிதியின் வழிகாட்டுதலும்தான் என்னை இந்தளவுக்கு உயர்த்தி இருக்கிறது. திமுக தலைவர் என்ற பதவியை எனக்கு வழங்கியவர்கள் கட்சியின் உடன்பிறப்புகளுக்கான நீங்கள்தான்.

தமிழகத்தின் முதல்வர் என்ற மாபெரும் பதவியை வழங்கியவர்கள் தமிழக மக்கள். திமுகவும், தமிழ்நாடும் என்னுடைய இரு கண்கள் என்று நான் செயல்பட்டு வரக்கூடிய இந்த நேரத்தில், கட்சியின் பவளவிழாவில் கலந்துகொள்வதை என் வாழ்நாளில் எனக்கு கிடைத்த பெருமையாக கருதுகிறேன். ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தை நாம் திராவிட மாதமாகவே கொண்டாடி வருகிறோம். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தனி மனிதரையும் காக்கக் கூடிய அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எந்தவொரு மாநில அரசு, ஒரு மாநிலத்துக்கு இந்தளவுக்கு நலத்திட்டங்களை செய்தது இல்லை என்று சொல்லுகிற அளவில்தான், திமுக அரசு தமிழகத்தை வளமிக்க மாநிலமாக மேம்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து வளப்படுத்தி வருகிறது.

நம்முடைய எல்லா கனவுகளும் நிறைவேறிவிட்டதா என்று கேட்டால் இல்லை. மாநில உரிமைகளை வழங்குகிற ஒரு மத்திய அரசு அமையவில்லை. நிதி உரிமை உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு இன்னமும் நாம் போராட வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம். இப்படிப்பட்ட ஏராளமான நெருக்கடிகளுக்கு இடையிலேதான், தமிழகத்தை எல்லா விதத்திலும் முன்னேற்ற வேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அண்ணாவும், கருணாநிதியும் வலியுறுத்திய மாநில சுயாட்சி என்பது, நம்முடைய உயிர்நாடி கொள்கைகளில் ஒன்று.

கோட்டையில் உட்கார்ந்து இருந்தாலும், இங்கிருக்கும் புல்லை வெட்டக் கூட நமக்கு அனுமதியில்லை. அங்கிருந்து அனுமதி வாங்க வேண்டியிருக்கிறது என்று தலைவர் கருணாநிதி எளிமையாக கூறுவார். இன்றைக்கு கிரீம் பன்னுக்கு ஏன் இவ்வளவு வரி போடுகிறீர்கள் என்று கேட்கக் கூட உரிமையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், மாநில சுயாட்சியை வென்றெடுப்பதற்கான ஒரு அறிவிப்புதான், இந்த பவள விழா செய்தியாக நான் சொல்ல விரும்புகிறேன். குறைவான நிதியைக் கொண்டே நம்மால் இவ்வளவு சாதனைகளை செய்ய முடிகிறது என்றால், முழுமையான நிதி கிடைத்தால், தமிழகத்தை எல்லாவற்றிலும் சிறந்த மாநிலமாக மாற்றிக்காட்ட நம்மால் முடியும். இந்த அதிகாரம் எல்லாம் மாநில அரசுக்கு கிடைக்கிற வகையில், அரசமைப்புச் சட்டத்தில் சட்ட முன்னெடுப்புகளை கொண்டு வருவதற்கான பணிகளை திமுக செய்யும்.

இந்தியாவில் மாநில சுயாட்சி, மாநில சுயாட்சிக் கொள்கைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஒரே இயக்கம் திமுக மட்டும்தான். காரணம், எப்போதும் நாம்தான் மக்களோடு மக்களாக இருக்கிறோம். மக்களுக்கு உண்மையாக இருக்கிறோம். இதனால், மக்கள் எப்போதும் நம்மோடு உள்ளனர். மக்களும் நாமும் ஒன்றாக இருப்பதால், வெற்றியும் நம்மோடு இருக்கிறது,” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.