சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா செல்லவில்லையெனில் பாகிஸ்தானுக்குத்தான் நஷ்டம் – ஆகாஷ் சோப்ரா

மும்பை,

2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்பட 8 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. ஆனால் இந்த தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லுமா? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இரு நாட்டு அணிகளும் ஆசிய மற்றும் ஐ.சி.சி தொடர்களில் மட்டுமே நேருக்கு நேர் மோதி வருகின்றன.

மேலும் 2023 ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடைபெற்றது. ஆனால் அப்போது பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாத இந்தியா தங்களது போட்டிகளை இலங்கையில் விளையாடி சாம்பியன் பட்டம் வென்றது. அதேபோல 2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை துபாய் அல்லது இலங்கைக்கு மாற்றுமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) பி.சி.சி.ஐ கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இது குறித்து ஐ.சி.சி இன்னும் முடிவு செய்யவில்லை.

மறுபுறம் இந்தியா வரவில்லை என்றால் அவர்களைப் புறக்கணித்து விட்டு மற்ற அணிகளை வைத்து சாம்பியன்ஸ் டிராபியை தங்களது நாட்டிலேயே நடத்த பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளது. ஆனால் அரசியலையும் விளையாட்டையும் ஒன்றாக கலக்காமல் தங்கள் நாட்டுக்கு வந்து விளையாடுமாறு இந்தியாவிற்கு தொடர்ந்து பல பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒருவேளை இந்தியா சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்கவில்லையெனில் பாகிஸ்தானுக்கு எதிர்பார்த்த வருமானம் கிடைக்காது என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். எனவே இந்தியா இல்லாமல் தொடரை நடத்தித்தான் பாருங்களேன் என்று மறைமுக சவால் விடுக்கும் அவர் இது பற்றி பேசியது பின்ருமாறு:-

“உண்மையில் பாகிஸ்தானில் நடக்கும் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. கடந்த ஆசிய கோப்பையில் நாம் இலங்கையில் விளையாடினோம். அதில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை தவிர்த்து பாகிஸ்தான் தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடியது.பாகிஸ்தானுக்கு சமீப காலங்களில் இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா சென்று விளையாடின. எனவே அவர்கள் அங்கே சென்று விளையாடலாம். இந்தியாவின் நிலைப்பாடு அரசின் கையில் உள்ளது. பிசிசிஐ கையில் எதுவுமில்லை. அது தொடர் துவங்குவதற்கு முன்பாக முடிவெடுக்கப்படும்.

ஆனால் இந்திய அணி விளையாடினால்தான் பொருளாதாரம் இயங்கும். சிலர் இந்தியா வேண்டாம் என்று சொல்கிறார்கள். இந்தியா பங்கேற்கவில்லை என்றால் என்ன செய்வீர்கள்? நீங்கள் எப்படி பணத்தை உருவாக்குவீர்கள்? ஒரு அணியின் பார்வையில் டிக்கெட் பணம் என்பது குறைவாகவே இருக்கும் என்பதை அவர்கள் இறுதியில் புரிந்து கொள்வார்கள். ஏனெனில் உண்மையில் ஒளிபரப்பாளர்களிடமிருந்து தான் அதிக பணம் கிடைக்கும். அது இந்தியா வந்தால் மட்டுமே உங்களுக்கு கிடைக்கும்” என்று கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.