சுந்தர்.சி. – விஷால் கூட்டணியின் ‘மதகஜராஜா’, கடந்த 2012ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு, அதே வேகத்தில் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்தது. படமும் அதே ஆண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. பல்வேறு பிரச்னைகளால் அந்தப் படம் இப்போது வரை வெளியாகவில்லை. அப்படி ஒரு படத்தில் நடித்ததை விஷால், அஞ்சலி, வரலட்சுமி என பலரும் மறந்தே போயிருப்பார்கள். ”இப்போது அதற்கென்ன?” என்கிறீர்களா, ‘மதகஜராஜா’வை விரைவில் திரைக்கு கொண்டு வரும் முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகிறதாம்.
ஜெமினி ஃபிலிம் சர்யூட் நிறுவனம் ‘மதகஜராஜா’வை தயாரித்தது. சுந்தர்.சி.யின் இயக்கத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, சதீஷ், நிதின் சத்யா, சோனுசூட் தவிர மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டிபாபு என பலரும் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்யா கெஸ்ட் ரோலிலும், சதா ஒரு பாடலுக்கும் ஆடியுள்ளனர். ‘மதகஜராஜா’வை சுருக்கமாக ‘எம்.ஜி.ஆர்.’ என்றும் சொல்லி வந்தனர்.

இந்நிலையில் தயாரிப்பு நிறுவனம் இதற்கு முன் தயாரித்த சில படத்தை விநியோகம் செய்ததில் ஏற்பட்ட பிரச்னைகளால், ‘மதகஜராஜா’வை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட சிக்கல்களால் பட வெளியீட்டை கைவிட்டனர். படத்தின் இயக்குநரும், ஹீரோவுமான விஷாலும் பெரும் முயற்சிகள் எடுத்தும் படத்தை வெளியே கொண்டு வரமுடியாமல் போனது.

”மதகஜராஜா’ எப்போது வெளியானாலும், அது சூப்பர் ஹிட் தான்” என சுந்தர்.சி.யும் தன் பேட்டிகளில் சொல்லி வந்தார். இந்நிலையில் சமீபத்திய ‘அரண்மனை 4’ படத்தின் வெற்றிக்கு பின், சுந்தர்.சியை தேடி தயாரிப்பாளர்கள் பலரும் அவரை அணுகி வருகின்றனர். இப்போது அவர் நடித்து இயக்கி வரும் ‘கேங்கர்ஸ்’ படமும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. தவிர நயன்தாரா நடிப்பில் ‘மூக்குத்தி அம்மன் 2’வையும் இயக்கி நடிக்கப் போகிறார் சுந்தர்.சி. இப்படியொரு சூழலில் ‘மதகஜராஜா’வை திரைக்கு கொண்டு வர அதன் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

”படத்தை வெளியிடுவதில் ஏற்பட்ட பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு விட்டது என்றும், விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க உள்ளனர். இந்தாண்டே படம் வெளியாகும்” என்ற பேச்சும் இருக்கிறது. தயாரிப்பாளர் சங்கத்தில் விஷாலுக்கு ரெட் கார்டு போட்டிருப்பதால், புதுப்படங்கள் ஒப்புக்கொள்ள முடியாமல் இருக்கிறார் விஷால் என்றும், இப்போது அவர் நடித்த ‘மதகஜராஜா’வை திரைக்கு கொண்டும் வரும் செய்தி கேட்டு மகிழ்ச்சியில் இருக்கிறார் அவர்” என்றும் சொல்கின்றனர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…