சென்னை: தமிழகத்தில் சுமார் 30 சார் பதிவாளர்அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இதில் லட்சக்கணக்கில் பணமும் முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் 500-க்கும்மேற்பட்ட சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களில் பத்திரப்பதிவு, வில்லங்கச் சான்றிதழ் பெறுதல், திருமணப் பதிவு உள்ளிட்ட பதிவுசார்ந்த பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சில சார்பதிவாளர் அலுவகங்களில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், அலுவலர்கள் லஞ்சம் பெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக தமிழக காவல் துறையின் லஞ்ச ஒழிப்பு துறைக்கும் புகார்கள் சென்றன. தொடர்ச்சியாக வரப்பெற்ற புகார்களைத் தொடர்ந்து, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
இதன்படி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சார் பதிவாளர் அலுவலகத்துக்கு நேற்று மாலை லஞ்ச ஒழிப்புப் பிரிவு டிஎஸ்பி வேல்முருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் கோபிநாத் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர் வந்தனர். அப்போது அலுவலக கதவை மூடி ஊழியர்கள் யாரையும் வெளியே செல்லவிடாமல், சோதனை மேற்கொண்டனர். அதன்படி அலுவலகஊழியர்கள், ஆவண எழுத்தர்கள், பத்திரப் பதிவுக்கு வந்த பொதுமக்கள்உள்ளிட்டோர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
பொதுமக்களிடம் விசாரணை: இதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்தியராஜ் தலைமையில் 7 பேர் கொண்ட லஞ்சஒழிப்புத் துறை போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். இந்த அலுவலகத்தின் நுழைவு வாயிலை பூட்டிய அதிகாரிகள், சார் பதிவாளர் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்களிடமும் விசாரணை மேற்கொண்டு, ஒவ்வொருவராக வெளியே அனுப்பினர்.
தொடர்ந்து, ஊழியர்களையும் ஆய்வுக்கு உட்படுத்தி, அலுவலகத்தில் சோதனை நடத்தினர். இங்கு4 மணி நேரத்துக்கும் மேலாக நடந்தசோதனையில், ரூ.2.64 லட்சம் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், பலமுக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும் தெரிகிறது. இதையடுத்து, சார் பதிவாளர் வேல்முருகன், புரோக்கர்கள், அலுவலர்கள் உட்பட 10 பேரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி ராமசந்திரமூர்த்தி தலைமையிலான 6 போலீஸார் நேற்று சோதனை நடத்தினர்.
பணத்தை வீசிய எழுத்தர்: அப்போது அதிகாரிகளைக் கண்டதும் ஆவண எழுத்தர் ஒருவர் தான் வைத்திருந்த பணத்தை சுற்றுச்சுவர் வழியாக அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் வீசினார். இதனை பார்த்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அந்த பணத்தை கைப்பற்றி அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். இந்த சோதனை இரவு 7.30 மணிக்கு மேலும் நீடித்தது.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையின்8 பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் உட்பட தமிழகத்தின் சுமார் 30 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்றதாகவும், இதில் லட்சக்கணக்கில் பணம்,முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும், சோதனை முழுமையாக முடிவடைந்த பிறகே, கைப்பற்றப்பட்ட பணம், ஆவணங்கள் குறித்த விவரம் தெரியவரும் என லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.