“திமுக சாயலில் இன்னொரு கட்சி தேவையில்லை” – விஜய்யின் தவெக குறித்து தமிழிசை கருத்து

சென்னை: திமுக சாயலில் இன்னொரு அரசியல் கட்சித் தேவையில்லை என தமிழக வெற்றிக் கழகம் குறித்து முன்னாள் ஆளுநர் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார். சென்னை, தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்தநாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். நிகழ்வில் பங்கேற்ற முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழக பாஜக மட்டுமல்லாமல் தமிழக மக்கள் சார்பிலும் மூன்றாவது முறையாக இந்தியாவை வலிமையாக வழிநடத்திக் கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வோம். அதேபோல், 100 நாட்களைக் கடந்து சிறப்பாக ஆட்சி நடத்திக் கொண்டிருப்பதற்கும் பிரதமருக்கு வாழ்த்துகள்.

பாஜகவின் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தியுள்ளோம். அதற்காக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா சொன்னதைப் போல பிரதமரின் 74-வது பிறந்தநாளையொட்டி ஒவ்வொரு தொண்டரும் 74 உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் முனைப்புடன் ஈடுபட்டுள்ளோம். மேலும், பிரதமரின் பிறந்தநாள் தொடங்கி மகாத்மா காந்தி பிறந்த நாள் வரை சேவை தினங்களைக் கொண்டாடுகிறோம். இதற்கான நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறோம்.

100 நாட்களில் மற்ற பிரதமர்கள் செய்யாததை பிரதமர் நரேந்திர மோடி செய்திருக்கிறார். இதுவரை ரூ.15 லட்சம் கோடிக்கான நலத்திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் ரூ.3 லட்சம் கோடி அடிப்படை கட்டமைப்புக்காக செலவிடப்படுகின்றன. இவையனைத்துக்கும் மேலாக, தூத்துக்குடி சரக்கு பெட்டகம் ரூ.473 கோடி செலவில் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது எனச் சொல்லும் தமிழக அரசு, உலகத் தரம் வாய்ந்த வகையில் நமது தூத்துக்குடி துறைமுகத்தை உயர்த்தி அதன் மூலம் இந்திய பொருளாதார வளர்ச்சியில் பங்காற்றும் என பிரதமர் சொன்னபோதும், அந்தத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பிரதமருக்கு நன்றி கூட தெரிவிக்கவில்லை.

இவ்வாறு மத்திய அரசு கொடுக்கும் திட்டங்களை இருட்டடிப்பு செய்துவிட்டு, மத்திய அரசின் பங்கே தமிழக வளர்ச்சியில் இல்லை என்னும் தோற்றத்தை திமுக ஏற்படுத்த முயற்சிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு பாரபட்சமின்றி அனைத்து திட்டங்களையும் தமிழகத்துக்கு கொடுத்து வருகிறது. மடிக்கணினி உற்பத்தி செய்யும் எச்பி நிறுவனம் தமிழகத்தில் தொடங்கப்படவுள்ளது.

இதுவரை பெண்களுக்கு முன்னேற்றம் என்று சொன்ன நிலையில், பெண்களால் முன்னேற்றம் என்னும் கொள்கை மத்திய அரசால் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. ஏனென்றால் 1 கோடி பெண்கள் லட்சாதிபதி ஆகியிருக்கிறார்கள். கட்டணமில்லா பேருந்து பயணம், ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் நிலையில், பெண்களை லட்சியவாதிகளாக லட்சாதிபதிகளாக மாற்றி அவர்கள் பல பேருக்கு வேலையளிக்கும் மாபெரும் திட்டத்தை மத்திய அரசு ஏற்படுத்தியிருக்கிறது.

இன்னும் 2 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக மாற்றும் திட்டத்தில் பலனடைய போகின்றனர் என பிரதமர் சொல்லியிருக்கிறார். இதற்காக பெண்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதுமட்டுமின்றி, திட்டம் தொடங்கும்போதே நிறைவடையும் காலத்தையும் பிரதமர் அறிவிக்கிறார். இதன் மூலம் நாடு எவ்வளவு முன்னேறுகிறது என்பதை அறிய முடியும். 75 ஆயிரம் மருத்துவ இடங்கள் அதிகரித்துள்ளன. இதனை அறிந்து மருத்துவர் என்ற முறையில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது மிகப்பெரிய மருத்துவ புரட்சி. இவையெல்லாமே 100 நாட்கள் சாதனை தான். இந்த 100 நாட்களில் நம் நாட்டிலும், வெளிநாட்டிலும் இந்தியாவின் பெருமையை உயர்த்திப் பிடித்த பிரதமருக்கு பாராட்டுக்கள்.

ஆட்சியில் பங்கு என்ற தாக்கம் திமுகவை சென்றடைந்ததும் அட்மின் பெயரை சொல்லி விசிகவினர் நாடகத்தை முடித்து வைத்திருக்கின்றனர். மதுவிலக்கு மாநாட்டுக்கு அதிமுகவை அழைப்போம், ஆளுங்கட்சியை எதிர்த்து நடத்துவோம் என சிறுத்தையாகத் தொடங்கிய திருமாவளவன், முதல்வர் ஸ்டாலினை பார்த்து வந்த பிறகு சிறுத்துப் போய்விட்டார். இது அப்பட்டமான நாடகம். திமுகவை மேடையில் வைத்துக் கொண்டு மதுவிலக்கை எப்படி பேசப் போகிறீர்கள்? கண்டனத்தை எப்படி தெரிவிக்க போகிறீர்கள்? இந்த மதுவிலக்கு மாநாடு தமிழக மக்களிடம் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. திமுகவை நெருக்குதலுக்கு வேண்டுமானால் விசிகவுக்கு மாநாடு உதவலாம்.

மதுவிலக்கை பாஜகவும், பாமகவும் வேகமாக எடுத்துச் சென்றிருக்கிறது. தேசிய மதுக் கொள்கை வேண்டுமாம். தேசிய அளவில் படிப்பதற்கு கொள்கை கொடுத்தால் ஒப்புக் கொள்ளாதவர்கள், தேசிய அளவில் குடிப்பதற்கு கொள்கை கொடுத்தால் மட்டும் ஒப்புக் கொள்வீர்களா? அப்போது மாநில உரிமை எங்கே போகிறது? சுயாட்சி எங்கே போகிறது? மதுவிலக்கு என்னும் உயரிய கொள்கையை அப்பட்டமான நாடகமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

முதல்வர் ஸ்டாலின் போன்று விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லமாட்டோம் என்பது போல் அல்லாமல், பெரியார் கொள்கைக்கு நாங்கள் எதிராக இருந்தாலும், கருப்புச் சட்டை அணிவோருக்கு காவிகளின் வாழ்த்துகள். தமிழகத்தில் எதிர்மறை அரசியலை கொண்டு சென்றதற்கு திமுகவுக்கு பெரும் பங்கு இருக்கிறது. பொய்யை மட்டுமே அரசியலாக கொண்டவர்கள். தேசிய கொள்கையோடு கூடிய மாற்று அரசியல் சக்தி தமிழகத்தில் வர வேண்டும். திமுக பவள விழா மாநாடு கொண்டாடும் வேளையில், திராவிட, மாநில அக்கறையோடு கூடிய தேசிய அரசியல் வேகமெடுக்க வேண்டும் என்னும் உறுதியை நாங்கள் எடுக்கிறோம்.

திமுக சாயலில் இன்னொரு அரசியல் கட்சி தேவையில்லை. தேசிய சாயலில் தான் மாற்று வர வேண்டும். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வேறு வழியில் பயணிப்பார் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், கட்சித் தொடங்கும் முன்னரே விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாதது போன்றவற்றை முன்வைத்து கொள்கையை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு சாயலை சாயமாக விஜய் பூசிக் கொண்டிருக்கிறார். பின்னர் தான் சாயம் வெளுக்கிறதா அல்லது வேறு சாயம் பூசிக் கொள்கிறாரா என்பது தெரியும். இரு கட்சிகளும் அவரை விட்டுவிடுவார்களா. திரைப்படத்தையே வெளியிட அனுமதிப்பதில்லை. மாநாட்டை நடத்த அனுமதிக்க மறுக்கின்றனர். அவர் தேசியத்துடன் வந்தாலாவது பரந்து பட்ட மனதோடு எடுத்துச் செல்வோம். திராவிட சாயத்தை பூசினால் அவ்வளவு தான்.

மத்திய தலைமை தான் கூட்டணியை முடிவு செய்யும். எதிர்மறை அரசியலில் பாஜகவுக்கு விருப்பமில்லை. அப்படிப்பட்ட கொள்கையை எடுத்துக் கொண்டால் ஆதரிப்போம். ஏன் கட்சி தொடங்கும் முன்னரே இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறார் என தெரியவில்லை. அவரது திரைப்படம் தெலங்கானாவிலும் வெளியாகும். இந்த வியாபாரத்துக்கு பல மொழிகள் தேவைப்படுகிறது. ஆனால், மக்களின் படிப்புக்கு பல மொழிகள் தேவையில்லை என சொல்வது அப்பட்டமான ஒன்று.

கடந்த முறை ஓணம் வாழ்த்தை முதல்வர் ஸ்டாலின் மலையாளத்தில் சொல்லியிருந்தார். தமிழக அரசியல்வாதிகளின் பிள்ளைகளில் எவ்வளவு பேர் இருமொழிக் கொள்கையை பின்பற்றும் சமச்சீர் கல்வியை படிக்கின்றனர். தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர். அங்கு மும்மொழிக் கொள்கை இருக்கும்போது ஏன் அரசுப் பள்ளிகளில் இருக்கக் கூடாது.

புதுச்சேரியில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. ஆனால் இங்கு ஏழைகளுக்கு ஒரு கல்வி, ஏற்றம் பெற்றவர்களுக்கு ஒரு கல்வி இருப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இது திமுகவின் ஏமாற்று வேலை. பிற மொழிகளைக் கற்றுக் கொண்டால் தமிழ் மேன்மையடையுமே தவிர தமிழ் குறையாது. கும்மிடிப்பூண்டியை தாண்டினால் யாருக்கும் எந்த அங்கீகாரமும் கிடைக்கக் கூடாது என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது” என்று அவர் பேசினார். நிகழ்ச்சியில், பாஜக மாநில துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.