புதுடெல்லி: நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான அறிவிப்பினை அரசு விரைவில் அறிவிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான என்டிஏ அரசின் மூன்றாவது ஆண்டு பதவி காலத்தின் 100 நாட்கள் குறித்து விளக்கமளிக்கும் வகையில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா மற்றும் அஸ்வின் விஷ்ணு ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது கோவிட் தொற்றால் நடைபெறாமல் இருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து கேட்கப்பட்டதற்கு பதில் அளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, “அதுகுறித்து நாங்கள் விரைவில் அறிவிப்போம்” என்றார். தொடர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து கேட்ட போது, “மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் போது எல்லாத் தகவல்களும் வெளிப்படையாக தெரிவிக்கப்படும்” என்றார்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் அமித் ஷாவின் இந்த அறிவிப்பு வந்துள்ளது. நாட்டின் மக்கள் தொகை குறித்த புதிய தகவல்கள் இல்லாததால், கடந்த 2011ம் ஆண்டு தரவுகளை வைத்தே அரசு அனைத்து திட்டங்களை வகுத்தும், மானியங்களை வழங்கியும் வருகிறது.
இந்தியாவில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு கடந்த 1881ம் ஆண்டு நடத்தப்பட்டது. இந்தப் பத்தாண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் பகுதி 2020, ஏப்.1-ம் தேதி நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கரோனா தொற்று காரணமாக அது ஒத்துவைக்கப்பட்டது.
வீடு வீடாக சென்று மக்கள் தொகைக் கணக்கு எடுக்கும் பணிகள் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிக்கும் (என்பிஆர்) 2020 ஏப்.1 முதல் செப்.30 வரை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அப்போது கரோனா தொற்று பரவியதால் அது ஒத்திவைக்கப்பட்டது.
ஒட்டுமொத்த மக்கள் தொகைக்கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டு நடவடிக்கைக்கு ரூ.12,000 கோடிக்கும் அதிகமாக செலவாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது நடத்தப்பட்டாலும், மக்கள் சுயமாக விபரங்களை பதிவிட வாய்ப்பளிக்கும் முதல் டிஜிட்டல் மக்கள் தொகைக்கணக்கெடுப்பாக இது இருக்கும்.
மக்கள்தொகைக் கணக்கெடுப்பு படிவத்தை அரசு அலுவலர் மூலம் பூர்த்தி செய்ய விரும்பாமல், சுயமாக பூர்த்தி செய்ய விரும்பும் குடிமக்களுக்கு என்பிஆர் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக, மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் தனி போர்ட்டல் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. மக்கள் சுயமாக பூர்த்தி செய்யும் பட்சத்தில் ஆர்தார் மற்றும் மொபைல் எண்கள் கட்டாயமாக்கப்படும்.