மும்பை: இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் ராகுல் காந்தியின் கருத்துக்காக அவரது நாக்கை துண்டிப்பவருக்கு ரூ.11 லட்சம் பரிசு வழங்குவேன் என்று ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி எம்எல்ஏசஞ்சய் கெய்க்வாட் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சஞ்சய் கெய்க்வாட் நேற்று கூறுகையில், “ராகுல்காந்தி தனது அமெரிக்கப் பயணத்தில் இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து பேசியுள்ளார். இது காங்கிரஸ் கட்சியின்உண்மையான முகத்தை வெளிப்படுத்தி விட்டது. ராகுல் காந்தியின் நாக்கை யார் துண்டித்தாலும் ரூ.11 லட்சம் பரிசாக வழங்குவேன்.
ராகுல் காந்தியின் கருத்து மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம். மராத்தியர்கள், தங்கர்கள், ஓபிசிக்கள் போன்ற சமூகத்தினர் இடஒதுக்கீட்டுக்காக போராடுகின்றனர். ஆனால் அதற்கு முன், இடஒதுக்கீட்டின் பலன்களை முடிவுக்கு கொண்டுவருவது பற்றி ராகுல் காந்தி பேசுகிறார்’’ என்றார்.
மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அரசில் பாஜக அங்கம் வகிக்கிறது. இந்நிலையில் கெய்க்வாட் கருத்து குறித்து மகாராஷ்டிர பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலே கூறுகையில், “கெய்க்வாட் கருத்தை நான் ஆதரிக்கவோ, ஏற்கவோ இல்லை. என்றாலும் நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் என்று கூறி இடஒதுக்கீடு முறையை முன்னாள் பிரதமர் நேரு எதிர்த்ததை நாம் மறக்க முடியாது. இடஒதுக்கீடு என்றால் முட்டாள்களை ஆதரிப்பதாக அர்த்தம் என்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கூறினார். இப்போது இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து ராகுல் காந்தி பேசுகிறார்” என்றார்.
மகாராஷ்டிர காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அதுல் லாந்தே கூறுகையில், “சஞ்சய் கெய்க்வாட் சமூகத்திலும் அரசியலிலும் வாழத் தகுதியற்றவர். அவர் மீது உள்துறை அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம்’’ என்றார். விதர்பா பிராந்தியத்தின் புல்தானா தொகுதி எம்எல்ஏவான சஞ்சய் கெய்க்வாட் இதற்கு முன்னரும் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளை கூறியுள்ளார்.