‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி நடித்து, இயக்கி, தயாரித்திருக்கிற ‘கடைசி உலகப் போர்’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
சுயாதீன இசைகலைஞர்களுக்கு நம்பிக்கை அளித்த ஹிப் ஹாப் ஆதி பற்றிய பல விஷயங்கள் கேள்விப்பட்டிருப்போம். தற்போது சில கலைஞர்களையும் தான் இயக்கும் திரைப்படங்களின் மூலமாக அறிமுகம் செய்து வருகிறார். இப்படத்திற்கு ஜூனியர் ஆர்டிஸ்டாக வந்த ஒருவரை முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து மேடையேற்றியிருக்கிறார்.
இதையும் தாண்டி முதலாம் ஆண்டு கல்லூரி படிக்கும் அருண் என்ற மாணவர் மீது நம்பிக்கை வைத்து இப்படத்தின் டிரைலரை எடிட் செய்வதற்கு வாய்ப்பு வழங்கியிருக்கிறார், ஆதி. இந்த கல்லூரி மாணவர் அருணுக்கும் இப்படியான விஷயங்கள் புதிதல்ல. இதற்கு முன்பே ‘ஆவேஷம்’ படத்தின் பாடலை எடிட் செய்திருக்கிறார். ஜி.வி. பிரகாஷ், சந்தோஷ் நாராயணன் போன்ற இசையமைப்பாளர்களோடு சேர்ந்து படத்தொகுப்புக்கான வேலைகளை பார்த்திருக்கிறார். பள்ளி பருவத்திலேயே தன்னுடைய கரியரிக்கான அடித்தளத்தை அமைத்துக் கொண்டவர் தற்போது கல்லூரி நேரம் போக மீதமுள்ள நேரத்தில் தன்னுடைய வீட்டிலேயே ஸ்டுடியோ செட் அப் வைத்து எடிட் வேலைகளை கவனித்து வருகிறார். ‘கடைசி உலகப் போர்’ படத்துக்காக வாழ்த்துகளைக் கூறி அருணிடம் பேசினோம்.
நம்மிடம் பேச தொடங்கிய அருண், ” ஒரு சேனலுக்கு முதன் முதல்ல தம்ப்நைல் பண்ணிக் கொடுக்க ஆரம்பிச்சேன். அதுல இருந்துதான் என்னுடைய எடிட்டிங் கரியரும் தொடங்குச்சு. கொரோனா காலத்துலதான் நான் எடிட்டிங் தொடர்பாக நிறைய விஷயங்கள் கத்துகிட்டேன். நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போதுல இருந்து எடிட்டிங் பண்ணீட்டு இருக்கேன். சொல்லப்போனால், இறுதி தேர்வு நடக்கும்போதெல்லாம் நான் ஸ்கூல், டியூஷன்னு முடிச்சிட்டு நைட்லதான் எடிட் வேலைகளை பார்ப்பேன். அப்படி சில பெரிய ப்ராஜெக்ட்ஸ் பண்ணும்போது ‘இவன் சின்ன பையன் சரியாக பண்ணுவானா’னு சிலருக்கு பயம் இருக்கும். அப்போ என்னுடைய ஸ்டைல், கட் இப்படிதான் இருக்கும்னு நான் டெமோ பண்ணி காமிச்சிடுவேன். அப்படி சந்தோஷ் நாரயணன் சார்கூட வேலை பார்க்கும்போது அவங்களுக்கு ஒரு புரொமோ மாதிரி பண்ணிக் கொடுத்தேன்.
அதே போல இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சாரோட கான்சர்ட்டுக்கும் 3டில ஒரு புரொமோ நான் பண்ணிக் கொடுத்தேன். நான் எடிட்டிங் பற்றி எல்லாமே யூட்யூப்லதான் கத்துக்கிட்டேன். இதுக்காக நான் எதுவும் கோர்ஸ் படிக்கல. முதன் முதல்ல ஜீ தமிழ் சேனலுக்கு நான் ஒரு மியூசிக் வீடியோ பண்ணிக் கொடுத்தேன். அதுதான் என்னுடைய முதல் இன்டஸ்ட்ரி ப்ராஜெக்ட்.” என்றவர் தான் ‘கடைசி உலகப் போர் படத்தின் டிரைலரை எடிட் செய்தது தொடர்பாக பேசுகையில், ” ஹிப் ஹாப் ஆதி அண்ணா ஒரு முறை பயிற்சி படத்தொகுப்பாளர்கள் கேட்டு இன்ஸ்டாகிராம்ல பதிவிட்டிருந்தாரு. அங்க இருந்துதான் அவருடனான பயணம் தொடங்குச்சு.
ஏற்கெனவே இந்த ‘கடைசி உலகப் போர்’ படத்துல நான் 1 நிமிடம் வேலை பார்த்திருக்கேன். அதுக்குப் பிறகு ஆதி அண்ணா ‘டிரைலர் கட் பண்றியா’னு கேட்டு முழு படமும் போட்டுக் காமிச்சாரு. அப்புறம் டிரைலருக்கான எடிட் வேலைகளை ஸ்டார்ட் பண்ணிட்டோம். முதல்ல ஹிப் ஹாப் ஆதி அண்ணா டிரைலர் கட் பண்றது தொடர்பாக கேட்கும்போது எனக்குமே கொஞ்சம் பயமாகதான் இருந்தது. பெரிய ஸ்கேல்ல உருவாகுற இந்த படத்துக்கு முன்னாடி நம்ம பண்ற இந்த டிரைலர்லதான் மக்கள் பார்க்கப்போறாங்க.
இந்த விஷயத்தை யோசிக்கும்போது இன்னுமும் பயம் அதிகமாச்சு. ஆனா, படம் பார்க்கும்போது எனக்கு நம்பிக்கை வந்துடுச்சு. அந்தளவுக்கு படத்துல மூவ்மென்ட்ஸ் இருந்தது. அதை வச்சு டிரைலர் கட் பண்ணிட்டேன். இந்த படத்துல ஆதி அண்ணாவோட ஆக்ஷன் பக்கத்தை அதிகமாக பார்ப்போம். ஆக்ஷன் பேக்கேஜ் கொண்ட ஷோரீலாக இந்த டிரைலரை ட்ரீட் பண்ணனும்னு நினைச்சேன். அப்படிதான் பண்ணியிருக்கேன். முதல் டிராஃப்ட் பண்ணி கொடுத்தும் அவருக்கும் ரொம்ப பிடிச்சிருந்தது.
முக்கியமாக கடைசில ஒரு ஷாட் எடிட் பார்த்துட்டு ‘நல்ல கட் பண்ணியிருக்கடா’னு சொன்னாரு. எனக்கு மீசைய முறுக்கு டைம்ல இருந்தே ஆதி அண்ணாவை ரொம்ப பிடிக்கும். அவர் எனக்கு ஒரு வழிகாட்டி. எனக்கு நிறைய விஷயங்கள் சொல்லிக் கொடுப்பாரு. இப்போ இந்த வாய்ப்பு கொடுத்தவர் நிறைய நேர்காணல்கள்ல என்னை பத்தியும் சொல்றாரு..” என நம்பிக்கை குரலிலேயே பேசி முடித்தார் அருண்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…